கோடை வெயில் கொளுத்துவதால் திருக்குறுங்குடி பெரியகுளம் வறண்டது

*பாசன விவசாயிகள் கவலை

நெல்லை : அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே தற்போதே கோடை வெயில் கொளுத்துவதால் திருக்குறுங்குடி பெரிய குளம் நீரின்றி வறண்டுள்ளது. இதனால் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பகல் நேரங்களில் கடும் வெயில் காணப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் கடும் வெப்பம் நிலவுகிறது. அனல் காற்றும் வீசுகிறது.

குறிப்பாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்கும் முன்னர் தற்போதே வறுத்தெடுக்கும் கோடை வெயிலால் இப்பகுதியில் உள்ள ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் நீரின்றி வறண்டு வருகின்றன.

அந்த வகையில் திருக்குறுங்குடி பெரியகுளமும் தண்ணீரின்றி வறண்டுள்ளது. திருக்குறுங்குடி பெரியகுளம் இப்பகுதியின் முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. இக்குளத்தின் மூலம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் கால்வாய் மூலம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையினால் குளம் நிரம்பி கடல் போல் காட்சியளித்தது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பெரியகுளம் நீரின்றி வறண்டுள்ளது. ஆங்காங்கே பள்ளங்களில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் தேங்கியுள்ளது.

தற்போது இப்பகுதியில் நெல், வாழை அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் வாழைகளுக்கு தண்ணீர் பாய்க்க வேண்டியதுள்ளது. இவ்வேளையில் குளம் வறண்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுபோல களக்காட்டில் உள்ள தாமரைகுளம், சீவலப்பேரிகுளம், கீழப்பத்தை குளம், கோவிலம்மாள்புரம், திரட்டுர், தோப்பூர், பத்மநேரி உள்பட குளங்களிலும் நீர் வற்றி காணப்படுகிறது. களக்காட்டில் ஓடும் பச்சையாறு, நாங்குநேரியான் கால்வாய், உப்பாறுகளிலும் தண்ணீர் முழுவதுமாக வறண்டுள்ளது.

கோடை மழை பெய்தால் மட்டுமே வறண்டு கிடக்கும் குளத்திற்கு தண்ணீர் வரத்து ஏற்படும் என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

Related Stories: