ஊட்டி, ஏப்.25: ஊட்டி-கோத்தகிரி சாலையில் சுமார் 5 கி.மீ தொலைவில் தொட்டபெட்டா அருகே 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தோட்டக்கலைத்துறை பண்ணையில் தேயிலை பூங்கா அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டங்களின் நடுவே நடைபயணம் செய்ய வசதியாக நடைபாதை, பூங்காவினை முழுமையாக கண்டு ரசிக்கும் வகையில் காட்சி கோபுரங்கள்,குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு சாதனங்கள் கொண்ட சிறு பூங்கா உள்ளது.
தேயிலை தூள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் மாதிரிகளும் நிறுவப்பட்டுள்ளது. குடிநீர் வசதி,கழிப்பறை, பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. நடப்பு ஆண்டு கோடை சீசனுக்காக தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், தேயிலை பூங்காவிலும் உள்ள பாத்திகளில் பல்வேறு ரகங்களில் பல வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் வெயில் கொளுத்தும் நிலையில் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் வர்ணம் தீட்டி பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில் தேயிலை பூங்காவிலும் கூட்டம் காணப்படுகிறது.
