மஞ்சூர்,ஏப்.20: ஆறுகளில் நீர் வரத்து குறைந்ததால் குந்தா, கெத்தை அணைகளில் நீர் மட்டம் சரிந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 12 நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. அப்பர்பவானி,அவலாஞ்சி,எமரால்டு, பைக்காரா,போர்த்திமந்து உள்பட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
மேலும் மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் ெவளியேற்றப்படும் தண்ணீர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாய நிலங்களின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக போதிய மழை பெய்யாததால் நீர்பிடிப்பு பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகள், சிற்றோடைகளில் நீர் வரத்து குறைந்துள்ளது.
மஞ்சூர் அருகே உள்ள குந்தா மற்றும் கெத்தை அணைகளுக்கான நீர் வரத்து பெருமளவு குறைந்துள்ளதால் அணைகளில் நீர் இருப்பு சரிந்துள்ளது. இருப்பினும் மின்சார உற்பத்திக்கு தேவையான தண்ணீர் அணைகளில் உள்ளதால் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்காது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
