கூடலூர், ஏப்.19: முதுமலை வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த லேசான கோடை மழையால் வனப்பகுதி மற்றும் சாலை ஓரத்தில் உள்ள புல்வெளிகளில் மான் கூட்டங்களின் மேய்ச்சல் அதிகரித்துள்ளது. கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வனப்பகுதிகளில் வறட்சி அதிகரித்து வருகிறது. நீர் ஆதாரங்கள் குறைந்து காணப்படுகின்றன. முதுமலை வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க காமராஜர் அணையில் இருந்து மாயார் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் முதுமலை வனப்பகுதிகளில் லேசான கோடை மழை பெய்துள்ளது. இந்த மழையால் புல்வெளிகளில் பசுமை படர்ந்துள்ளது. இதில் சாலை ஓர புல்வெளிகளில் மான் கூட்டங்கள் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சாலை வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் சுற்றுலாப்பயணிகள் சாலை ஓரங்களில் மேயும் வன விலங்குகளை பார்த்து ரசித்து வருகின்றனர்.
