மேட்டுப்பாளையம்,ஏப்.25: காரமடையை அடுத்துள்ள பரளிக்காடு பகுதி மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பில்லூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் அமைந்துள்ளது. இந்த பரளிக்காடு சூழல் சுற்றுலாவிற்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்க https://Coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும்.
இந்த சூழல் சுற்றுலாவில் பில்லூர் அணையில் நீர்த்தேக்க பகுதியில் பரிசல் பயணம்,பழங்குடியின மக்களின் பாரம்பரியமிக்க உணவு,அத்திக்கடவு ஆற்றில் மூலிகை குளியல்,பழங்குடியினரின் நடனம் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்க துவங்கியதால் பில்லூர் அணையின் நீர்மட்டமும் வெகுவாக சரிந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 76 அடியாக உள்ளது.
இதனால் பரிசல் பயணத்தை தொடர முடியாத நிலை காரணமாக சூழல் சுற்றுலா கடந்த 4 வாரங்களாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து கடந்த 16 முதல் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் தற்போது குந்தா நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் பில்லூர் அணையில் பரிசல்கள் இயக்கும் அளவிற்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனையடுத்து இன்று (ஏப்.25) முதல் பரளிக்காடு சூழல் சுற்றுலா மீண்டும் இயங்க உள்ளதாக காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
