நடிகர் விஜய் நேற்று மதியம் 12 மணி முதல் வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு, சைதாப்பேட்டை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டம் என்ற பெயரில் அனுமதி வாங்கிப் பொதுக்கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், விஜய் பேசியதாவது: ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியே வரமாட்டார் என மற்றும் பலர் கட்சியில் உள்ள 10 முறை தோற்ற (எடப்பாடி பழனிசாமி), இன்னமும் திருந்தாதவர் சொல்கிறார். அய்யா அனுபவசாலி அவர்களே, சேலத்துக்குப் பக்கத்தில் தொகுதியில் மட்டும் சென்று பதுங்கிக்கொள்ளாமல், தமிழ்நாட்டில் வேறு ஏதாவது தொகுதியில் நின்று உங்களால் ஜெயித்துக்காட்ட முடியுமா? வெற்றி பெறுவது இருக்கட்டும் முதலில் வேறு தொகுதியில் நிற்க முடியுமா? முதலில் அதைச் செய்துவிட்டுப் பிறகு என்னைப் பற்றிப் பேசுங்கள்.
சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் எனப் பயந்து நமது சின்னத்தையே திருடியவர்தானே. அதனால்தான், நமது மன்றத்தில் பல வருடமாகப் பயணித்த சுயச்சை வேட்பாளரின் சின்னத்தை நம்முடையாதாக ஆதரித்து சுயச்சை வேட்பாளருக்கு தொலைக்காட்சி சின்னத்தில் வாக்களிப்பது விசில் சின்னத்திற்கு வாக்களிப்பது போன்றது. பாஜ மந்திரி ஒருவர் விஜய் நடிகன் என்று கூறுகிறார். ஆமாம், நான் நடிகன்தான்; அவர் ஏதோ புதிதாகக் கண்டுபிடித்ததுபோல் பேசுகிறார். ஆனால், அரசியலில் நடிக்கவில்லை. குழந்தைகள் தங்களுக்கு மிட்டாய், உடை வேண்டும் என்றால் அழுது அடம் பிடித்து வாங்குவதுபோல, உங்களுக்குப் பிடித்த விஜய் மாமாவுக்காக, விஜய் மாமா ஜெயிக்க உங்கள் வீட்டியில் உள்ளவர்களிடம் விசில் சின்னத்திற்கு ஓட்டுப்போடச்சொலுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
* விதிகளுக்கு கட்டுப்படாத கூட்டம்
க்யூஆர் கோடு அனுமதிச்சீட்டு இல்லாதவர்களை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்குள் அனுமதிக்காமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால், காவல்துறையின் விதிகளைக் கடைபிடிக்காத தவெகவினர் காவல்துறையினரைத் தள்ளிவிட்டு விட்டு மைதானத்தினுள் நுழைந்தனர். அதனால், அந்த இடத்தில் நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாகக் காவல் துறையினர் சிலருக்கு அடிபட்டது.
* கூட்டத்தில் குழந்தைகளுக்கு அனுமதி
நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவது தொடர்பாகத் தவெக வெளியிட்ட அறிக்கையில், இந்தக் கூட்டத்திற்குக் குழந்தைகளை அனுமதிக்கமாட்டோம் எனத் தெரிவித்து இருந்தனர். ஆனால், விஜயின் ரசிகர்கள் தங்களின் குழைந்தைகளையும் அழைத்துவந்தனர். காவல்துறையினர் அனுமதிக்க மறுத்தபோதும், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்றனர். தவெகவினரும் அறிக்கையில் மட்டும் குழந்தைகளுக்கு அனுமதியில்லை என்று பெயரளவில் சொல்லிவிட்டு, மைதானத்திற்கு வந்தவர்களைத் தடுக்காமல் உள்ளே அனுமதித்தனர்.
* ரூ.100 கோடி விஜய் மோசடியா? செங்ஸ் சொன்ன பதில்
ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரை ஆதரித்து, சோலார் பகுதியில் அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசுகையில், ‘‘10 முறை தோல்வியுற்ற எடப்பாடி பழனிசாமியால் திமுகவை தோற்கடிக்க முடியாது. ஆள் இல்லாத கட்சியான வாசன் கட்சியாலும் வெற்றி பெற முடியாது. அதிமுக கூட்டணியில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் டெபாசிட் கூட பெற போவதில்லை. நான் தான் முதல்வராக வந்து இருக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்து ரூ.1,000 கோடியை கொள்ளையடித்து சென்று விட்டார். என்னிடம் பெட்டி இருந்தால் நானே முதல்வராகி இருப்பேன். சசிகலா சட்டமன்ற குழு தலைவராக என்னை அறிவித்தார். அருகில் இருந்த எடப்பாடி பழனிசாமி மலைப்பாம்பினை போல சசிகலா காலில் விழுந்தார். டிடிவி, ஓபிஎஸ் ஆகியோருக்கு துரோகம் செய்தவர் தான் எடப்பாடி பழனிசாமி’’ என்றார்.
இதைத்தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் ரூ.100 கோடி சொத்து கணக்கை மறைத்துள்ளதாக கூறப்படுகிறதே? என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘யார் எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், எங்கள் தலைவர் தூய்மையான மனிதர்’’ என்றார். தொடர்ந்து, பழைய அதிமுக இறந்து விட்டது, இப்போதுள்ள அதிமுக அமித்ஷா கையில் இருப்பதாக, ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு தங்களது கருத்து என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘அது உண்மை தான்’’ என ஒரே வார்த்தையில் பதில் அளித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
* இது வடக்குக்கும், தெற்குக்குமான தேர்தல்: தமிழும், தமிழ்நாடும் ஒருபோதும் தலைவணங்காது; நம் மாநிலம் முன்னோக்கி போகணுமா? பின்னோக்கி போகணுமா? என்பதை முடிவு செய்யுங்கள்; கமல்ஹாசன் எம்.பி. வீடியோ வெளியிட்டு பேச்சு
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியுள்ளதாவது: இந்த முறை ஒரு நடிகனாகவோ, அரசியல் கட்சித் தலைவனாகவோ இல்லாமல், தமிழ்நாட்டில் வாழ்கிற, தமிழில் சிந்திக்கிற ஒருவனாக உங்களோடு பேசுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் இந்த தேர்தல் தெற்குக்கும் வடக்குக்குமானது. முன்னோக்கிப் போகணுமா அல்லது பின்னோக்கிப் போகணுமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது. இன்னும் சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த முடிவுகள் சென்னையில் எடுக்க வேண்டுமா, இல்லை டெல்லியிலிருந்து சொல்லிவிட்டு நமக்குச் செய்தி வரவேண்டுமா என்பதை தீர்மானிக்கிற தேர்தல் இது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட திட்டங்களால், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முதலிடம் வகிக்கிறது. திராவிட மாடல் அரசு செய்திருக்கும் சாதனைகள், மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டை ஆளும் தகுதி படைத்தவர் என்பதையே உறுதி செய்கிறது. அன்று பெரியார் நமக்கு சுயமரியாதையை தந்தார்; அண்ணா அதற்கு அரசியல் குரல் தந்தார்; கலைஞர் தன் அறிவாலும் உறுதியாலும் தமிழ் அடையாளத்தைக் காத்தார். ஸ்டாலின் இன்று கூட்டாட்சி தத்துவத்தின் காவல் வீரராக திகழ்கிறார். வெவ்வேறு தலைவர்கள், வெவ்வேறு காலகட்டங்கள், ஆனால் முழக்கம் ஒன்றுதான். அது ‘தமிழும் தமிழ்நாடும் ஒருபோதும் தலைவணங்காது’. அந்த கனல் இருக்கும் வரை தமிழ்நாட்டை எவராலும், எவனாலும் வீழ்த்த முடியாது. தற்போது இருக்கும் நலத்திட்டங்கள் தொடர வேண்டும்.
உலக நாடுகளுக்கு இணையாக தமிழ்நாடு உயர வேண்டும். அதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதை நீங்களும் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏதோ உணர்ச்சிவசப்பட்டு யோசிக்காமல் வாக்களித்துவிட்டால், இது ரெடிமேட் சட்டை இல்லை, பிடிக்கவில்லை என்றால் உடனே மாற்றிக்கொள்ள. யாரால் நம்மைப் பாதுகாக்க முடியும், யாரால் நம்ம உரிமைகளுக்காகப் போராட முடியும், யாருக்கு உண்மையிலேயே அந்த எண்ணம் உள்ளது என்பதை யோசிச்சு, உணர்ந்து வாக்களிப்பது அவசியம். திமுகவில்தான் அது சாத்தியமா என்று கேட்டால், வரலாறு ‘ஆம்’ என்றே பதில் சொல்லும். நினைவிருக்கட்டும், தேர்தல் நாள் ஏப்ரல் 23. அதிகாலையிலேயே வாக்குச்சாவடிக்குச் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
