சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து அனைத்து அரசியல் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இன்று மாலையுடன் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான நேரம் முடிவடைகிறது. இந்த நிலையில் இறுதிகட்ட பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இறுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த பிரச்சாரத்தில் முதல்வர் பேசியதாவது;
கொளத்தூர் என் செல்லக் குழந்தை. கொளத்தூரில் எனக்கு நானே இன்ட்ரோ கொடுக்கிறேன். நன்றாக படிக்கும் பையன் ரிவைஸ் செய்வதுபோல இங்கு வந்துள்ளேன். மாபெரும் தொகுதியாக கொளத்தூரை மாற்றியுள்ளோம். உயர்ந்த கொளத்தூராக உறுதியாக மேம்படுத்துவேன். கொளத்தூரில் தேவையான மேம்பாலங்களை கட்டிக் கொடுத்துள்ளோம். கொளத்தூர் தொகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் புதிய புதிய கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம்
என்னதான் தமிழ்நாட்டுக்கே முதல்வராக இருந்தாலும் கொளத்தூருக்கு நான் எம்.எல்.ஏ.தான். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு 3 முறை வாக்களித்த நீங்கள் இம்முறையும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சென்னை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது. கடந்த முறையை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இம்முறை வெற்றிபெற வேண்டும்.
திமுக ஆட்சியில் தலைநகர் சென்னையை தலைசிறந்த சென்னையாக மாற்றியுள்ளோம். சென்னை எப்போதும் திமுகவின் கோட்டை. அனைத்து மாவட்டங்களையும் அனைத்து ஊர்களையும் சமமாகவே பார்க்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் மகளிருக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். கல்விக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு ஒரு மாடல் ஸ்டேட். எல்லா துறைகளும் சிறக்க வேண்டும் என உழைப்பவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். வெள்ளத்தில் சென்னை மக்களை தத்தளிக்க விட்டதுதான் அதிமுக ஆட்சி என முதல்வர் கூறினார்.
200 தொகுதிகளுக்கு மேல் சுற்றி வந்த முதலமைச்சர் ஸ்டாலின், கொளத்தூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்
