மை வைத்தும் வாக்களிக்க மறுக்கலாமா? இயந்திரம் மீது சந்தேகம் வந்தால் என்ன பண்றது? வாக்குச்சாவடி ரகசியங்கள்

 

ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் நாளை நடக்கும் வேளையில், வாக்குச்சாவடிக்குள் இடம்பெறும் சுவாரஸ்யமான நடைமுறைகள் மற்றும் நாம் அறியாத பல சட்ட விதிகள் குறித்து தேர்தல் ஆணையம் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஒரு சாதாரண வாக்காளராக நாம் உள்ளே நுழையும்போது நடக்கும் வழக்கமான விஷயங்களைத் தாண்டி, அங்கு ‘வாக்காளர்கள்’ மற்றும் அவர்களுக்கான பிரத்யேக விதிகள் இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும்.

* மை வைத்தும் வாக்களிக்க மறுக்கலாமா? (49 O)

வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, இடது கை விரலில் அழியாத மை வைக்கப்பட்ட பிறகு, ஒருவேளை உங்களுக்கு வாக்களிக்க விருப்பமில்லை எனத் தோன்றினால் என்ன செய்வீர்கள்? ‘49 O’ விதியின்படி, மை வைக்கப்பட்ட பின்னரும் ஒரு வாக்காளர் ‘நான் வாக்களிக்க விரும்பவில்லை’ என்று கூறலாம். இத்தகைய சூழலில், தேர்தல் நடத்தும் அலுவலர் (PO), 17A பதிவேட்டில் ‘வாக்களிக்காமல் வெளியேறினார்’ (Left Without Voting) என்று குறிப்பிட்டு, வாக்காளரிடம் கையெழுத்து பெற்று அவரை அனுப்பி வைப்பார்.

* உங்கள் வாக்கை வேறொருவர் போட்டுவிட்டால்? (49 P – டெண்டர் வாக்கு)

வாக்குச்சாவடிக்குச் செல்லும் ஒருவருக்கு, தன் வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது எனத் தெரியவந்தால் அவர் கவலைப்படத் தேவையில்லை. ‘டெண்டர் வாக்கு’ (Tendered Vote) முறையில் அவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம். அவருக்கு மின்னணு இயந்திரத்திற்குப் பதில், பிரத்யேக வாக்குச்சீட்டு (Ballot Paper) வழங்கப்படும். இந்த வாக்குகள் இயந்திர வாக்குகளுடன் எண்ணப்படாது என்றாலும், வெற்றி-தோல்வி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இருக்கும்போது இவை முக்கியத்துவம் பெறும்.

* 2 ரூபாயும்… சவால் வாக்கும்!

ஒரு வாக்காளரின் அடையாளத்தில் அங்கீகரிக்கப்பட்ட முகவருக்குச் சந்தேகம் இருந்தால், அவர் வெறும் 2 ரூபாய் செலுத்தி அந்த வாக்காளரின் அடையாளத்தை சவாலுக்கு உட்படுத்தலாம். கிராம நிர்வாக அலுவலர் அல்லது காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு, அந்த அடையாளம் உண்மை எனத் தெரிந்தால் வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். முகவர் செலுத்திய 2 ரூபாய் அரசு கணக்கில் சேரும். ஒருவேளை அடையாளம் தவறு என நிரூபணமானால், அந்த நபர் உடனடியாகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்.

* VVPAT இயந்திரம் மீது சந்தேகம் வந்தால்? (49 MA – டெஸ்ட் வாக்கு)

‘நான் ஒரு சின்னத்திற்கு வாக்களித்தேன், ஆனால் விவிபேட் இயந்திரத்தில் வேறு சின்னம் தெரிகிறது’ என்று ஒரு வாக்காளர் புகார் கூறினால், அவருக்கு ‘டெஸ்ட் ஓட்டு’ அளிக்க வாய்ப்பு உண்டு. இதற்காக அவரிடம் ஒரு உறுதிமொழிப் பத்திரம் பெறப்படும். அதிகாரிகள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் அவர் மீண்டும் ஒருமுறை வாக்களித்து காட்ட வேண்டும். அவர் கூறிய புகார் உண்மையாக இருந்தால் வாக்குப்பதிவு உடனடியாக நிறுத்தப்படும். ஆனால், அவர் கூறியது பொய் எனத் தெரிந்தால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சிறை தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

* பார்வையற்றோர் மற்றும் முதியோருக்கான உதவி (49 N)

பார்வையற்றோர் அல்லது உடல் ஊனமுற்ற வாக்காளர்கள் தங்களுக்கு உதவியாக 18 வயது நிரம்பிய ஒருவரை அழைத்து வரலாம். அந்த உதவியாளர் 14A படிவத்தில் ரகசியம் காப்பதாக உறுதிமொழி அளிக்க வேண்டும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், உதவியாளரின் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும்.

* அதிகாரிகளின் ரகசிய குறியீடுகள்

வாக்குச்சாவடி அலுவலர் (PO1) தன் வசம் உள்ள வாக்காளர் பட்டியலில் சில ரகசியக் குறியீடுகளை பயன்படுத்துவார். ஆண் வாக்காளர் என்றால் பெயருக்கு கீழே அடிக்கோடு இடுவார். பெண் வாக்காளர் என்றால் பெயருக்குக் கீழே கோடு இட்டு, வரிசை எண்ணைச் சுற்றிலும் ஒரு வட்டம் இடுவார். மூன்றாம் பாலினத்தவர் என்றால் நட்சத்திரக் குறியீடு (*) இடுவார்.

* அதிகாலை 5.20-க்கு தொடங்கும் Mock Poll

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அதிகாரிகள் ‘மாக் போல்’ எனும் மாதிரி வாக்குப்பதிவை நடத்துகின்றனர். இதில் குறைந்தபட்சம் 50 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, இயந்திரம் சரியாக செயல்படுகிறதா என்பது முகவர்கள் முன்னிலையில் உறுதி செய்யப்படும். தேர்தல் என்பது வெறும் இயந்திரத்தில் பட்டன் அழுத்துவது மட்டுமல்ல, அதன் பின்னால் இத்தனை நுணுக்கமான சட்டங்களும், பாதுகாப்பு முறைகளும் ஒளிந்துள்ளன. ஒவ்வொரு வாக்காளரும் தன் உரிமையை நிலைநாட்ட இந்த விதிகள் கேடயமாகச் செயல்படுகின்றன.

Related Stories: