எய்ம்ஸ், மீனவர் பிரச்னை அதிமுக-பாஜ கூட்டணிக்கு பாடம் புகட்ட தென்மாவட்டம் தயார்

 

தேர்தல் வந்தால்தான் ஒன்றிய பாஜ அரசுக்கு தமிழர்கள் மீது அக்கறை ஏற்படுகிறது. ஆனால், தமிழகத்துக்கு தேவையான மாணவர்களின் கல்வி நிதி, மீனவர் பிரச்னையில் உறுதியான நடவடிக்கையின்மை, மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னையில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. நாளை தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஒன்றிய பாஜ அரசு தென்மாவட்டங்களுக்கு செய்த ஓரவஞ்சனைகளை கொஞ்சம் பார்ப்போமா?

* ஜவ்வாய் இழுக்கும் எய்ம்ஸ்:

மதுரை மாவட்டம், தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் அமைப்பதற்கு ஒன்றிய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கடந்த 2019 ஜன.27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டு ஜைக்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் சுமார் ரூ.1,264 கோடி முதல் ரூ.2,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் பணிகள் திட்டமிடப்பட்டது. ஆனால், அடிக்கல் நாட்டி 7 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், 2 எம்பி தேர்தலே முடிந்த நிலையிலும், இன்னும் முதல்கட்ட கட்டுமானப்பணியே முடிந்தபாடில்லை.

ஆனால், இதே சமயத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட குஜராத் மாநிலம் ராஜ்கோட் எய்ம்ஸ், ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இவைகளுக்கு ஒன்றிய அரசு பட்ஜெட்டில் நேரடியாக நிதி வழங்கியது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா பன்னாட்டு நிறுவனத்திடம் கடன் பெறுவதற்கு கடந்த 2021 மார்ச்சில் கையெழுத்தானது.

* பிரதமர் வந்தும் மவுனம்:

மொத்த நிதித் தேவையான ரூ.1977.80 கோடியில் 82 சதவீத தொகையான ரூ.1,627.70 கோடியை ஜைக்கா நிறுவனத்திடம் கடனாக பெறுவது எனவும், மீதமுள்ள தொகையை ஒன்றிய அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடிக்கல் நாட்டி 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணி நிறைவு பெறாமல் ஜவ்வாய் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. மாணவர் சேர்க்கை மட்டும் நடத்தப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் அவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இவர்கள் எய்ம்ஸை பார்க்காமல் படிப்பையும் முடிக்கப் போகிறார்கள். முதல்கட்ட கட்டுமானம் முடிந்து பிரதமர் மோடி, கடந்த மார்ச் 1ம் தேதி திறந்து வைப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால், முதல்கட்டமே அரைகுறை கட்டுமானத்தில் இருந்ததால், கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. எய்ம்ஸ் பணி எப்போது தான் முடியும் என்ற ஏக்கத்துடன் தென்மாவட்ட மக்கள் பார்க்கும் நிலைதான் உள்ளது.

* மூழ்கும் மீனவர் வாழ்க்கை:

தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால், இது குறித்து ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுக்கும் அழுத்தத்தால் அவ்வப்போது இலங்கையுடன் பேசி மீனவர்களை விடுவிப்பது நடந்து வருகிறது.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்து சிறைபிடிக்கும் அட்டூழியங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மீனவர்களின் பல கோடி மதிப்பிலான படகுகள் எல்லாம் இலங்கை கடற்பகுதியில் வீணாகி வருகின்றன. பல படகுகள் ஏலமும் விடப்படுகின்றன. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது.

மீனவர் பிரச்னையில் ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியும் பயனில்லாமல் உள்ளது. ஆனால், அதே சமயம் குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் சிறைபிடித்தால் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி விடுவிக்கின்றனர்.

தமிழகம் என்றாலே ஒன்றிய பாஜ அரசுக்கு வேப்பங்காயாகத்தான் கசக்கிறது. இது தவிர திருப்பரங்குன்றத்தில் தீப பிரச்னையை மதப் பிரச்னையாக மாற்ற முயன்றனர். ஆனால், தமிழக அரசு அதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திவிட்டது. ஒன்றிய பாஜ அரசு தமிழகத்துக்கு செய்யும் துரோகங்களுக்கு அதிமுகவும் ஒத்து ஊதுகிறது. இவர்களுக்கு தேர்தலில் சரியான பாடம் கற்பிக்க தென்மாவட்ட மக்களும் மீனவர்களும் தயாராக
உள்ளனர்.

Related Stories: