சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். நேற்றைய இறுதிக்கட்ட பிரசாரத்தில் அவர் பேசியதாவது: தவெக சார்பில் விஜய் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என கூறுகிறார். இந்த தொகையை அவரது மனைவி சங்கீதாவிற்கு கொடுப்பாரா? எங்கிருந்து பணத்தை எடுப்பார்கள் என கூற வேண்டும். தாலி இலவசம், தொங்கட்டான் இலவசம், மூக்குத்தி, தோடு இலவசம், அரிசி, பருப்பு இலவசம் கொடுக்கிறேன் என்கிறார்கள்.
இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் இல்லை. புதிதாக கட்சி துவங்கியவர் ஆட்சியில் பங்கு, கூட்டணிக்கு வாருங்கள், என்னை பிடித்து தொங்கு என்றார். ஒருவர் கூட வரவில்லை. கடைசியாக என்ன செய்வது என தெரியவில்லை. பல துணிகள் வாங்கி ஒட்டுபோட்டு தைத்துள்ளது போல் தைத்துள்ளார்கள்.
என்னால் இலவச அறிவிப்புகளை அறிவிக்க முடியாதா? ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ெஹலிகாப்டர் தருகிறேன், மொட்டை மாடியில் ஹெலிகாப்டர் நிறுத்த ஹெலிபேட் அமைத்து தருகிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு கிலோ தங்கம் கொடுப்பேன் என்றால் சிரிக்கிறீர்கள். நாட்டில் நான் மட்டும் தான் இலவசங்களை எதிர்க்கிறேன். இங்கே படித்தவனுக்கு மதிப்பில்லை. நடித்தவனுக்கு தான் மதிப்பு இருக்கிறது. காரணம், படித்தவன் நடித்தவனை நாடாள கூப்பிடுகிறான். நடிப்பவர்களை தேடி தேடி பல மகத்தான தலைவர்களை மறந்து விட்டீர்கள்.
இவ்வாறு கூறினார்.
