தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் மற்றும் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வா.ரங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்து ஆன்மிக நம்பிக்கையை மூலதனமாக்கி, அதிகாரத்தை பிடித்த பாஜ இந்நாட்டின் பெரும்பான்மையான இந்து மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது. ஆனால், மக்களுக்கு சமத்துவ உணர்வு, சுயமரியாதை உணர்வை ஊட்டி, மக்கள் வாழ்வில் மட்டுமில்லாமல் தெய்வத் திருக்கோயில்களிலும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிலைநாட்டியுள்ளார்.
திராவிடத் தமிழர் தன்மான ஆட்சியின் மிக முக்கியமான சமூக நீதித் திட்டம் ஆலயங்களில் அனைவரும் சமம் என்பதை நடைமுறைப்படுத்தியது. இதற்கான சட்டத்தை 1972ல் கலைஞர் கொண்டுவந்தார். அப்போது சில வஞ்சக கூட்டத்தினர், நீதிமன்ற படியேறி சதி செய்து அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை தடுத்தனர்.
2006-09 ஆண்டுகளில் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்கள் தாயற்ற பிள்ளைகள் போல நின்றபோது, தாயுமானவராக அரவணைத்தவர் கலைஞர் கருணாநிதி. அவரின் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கருவறையில் சாதி பேதத்தையும், பாலின பேதத்தையும் ஒழித்து, சமத்துவ ஆன்மிகத்தை கட்டி எழுப்ப போராடி வருகிறார். அவர் பக்கம் நாங்கள் நிற்கின்றோம்.
2021, ஆக.14ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் பார்ப்பனர்கள் அல்லாத அர்ச்சகர் மாணவர்களை முதல்வர் நியமித்தார். இதுதொடர்பாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திலும் நூற்றுக்கணக்கான வழக்குகளை தொடர்ச்சியாக பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்து வழக்கு தொடுத்து வருகின்றனர். இதை தமிழக முதல்வர் தொடர்ந்து எதிர்த்து போராடி வருகிறார். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுத்தும், அச்சுறுத்தியும், சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தமிழ்நாட்டில் 2007-08ல் 207 மாணவர்கள் பயிற்சி முடித்திருந்தனர். தொடர்ந்து, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் 2022 -23ல் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். திமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டு 94 பேர், குறிப்பாக மூன்று மாணவிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு அர்ச்சகர் படிப்பை, முடித்து சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். தற்போது, 2023-2024ல் தேர்வான 111 மாணவர்கள், 2024-2025ல் 96 மாணவர்கள், 2025-2026ல் 100 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று வருகின்றனர்.
தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலில் இந்து சமய அறநிலையத்துறை கருசுமக்கும் பெண்கள் கருவறைக்குள் என்ற முழக்கத்தை முன்வைத்து பணி செய்து வருகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் சமத்துவ ஆன்மிக ஆட்சி தொடர திமுக கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று எங்கள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
பாசிசத்தை வீழ்த்த, மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பாஜ ஆட்சியை வீழ்த்தும் ஜனநாயகக் போர்க்களம் காண்பது, நம் ஒவ்வொருவரின் மாபெரும் ஜனநாயகக் கடமை. இப்போர்களத்தில் கண்ணனாக நின்று, மு.க.ஸ்டாலின் எல்லோரையும் வழிநடத்திச் செல்கிறார். இது தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
