அரசியல் ஆதாயம் தேட முயன்ற அன்புமணியை விரட்டியடித்த கிராம மக்கள்: வீடியோ வைரல்

 

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கொத்தங்குடியில் குடிநீர் பிரச்னை காரணமாக அந்த பகுதியை சேர்ந்த கிராமமக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பிரசாரத்திற்காக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு காரில் சென்று கொண்டிருந்த பாமக தலைவர் அன்புமணி, தான் எம்பி எனக்கூறி காரை நிறுத்தியதோடு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவாக சாலையில் அமர்ந்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அப்போது அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தேர்தல் நேரத்தில் பாமகவுக்கு ஆதரவு திரட்ட முயன்றதாக கூறி அன்புமணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள், உள்ளூர் பிரச்னையை அரசியலாக்க வேண்டாம், இந்த பிரச்னையை நாங்கள் பார்த்து கொள்கிறோம், இதனால் போராட்டத்தில் இருந்து வெளியேறும்படி அன்புமணியிடம் கூறியதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர். இதனால் அவமானப்பட்ட அன்புமணி போராட்ட களத்தில் இருந்து வெளியேறி தனது பாதுகாவலர்களுடன் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அன்புமணி விரட்டியடிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: