தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குபதிவு நாளை (23ம் தேதி) நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை மற்றும் நிலைக்கண்காணிப்பு குழுவினர், போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குபட்ட செலம்பகவுண்டன் பாளையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு கார்களை நிறுத்தி பறக்கும் படையினர் தீவிர சோதனை செய்தனர். அப்போது ஒரு காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.89 லட்சத்து 83 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசங்கர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணையில், பணத்தை கொண்டு வந்தவர் மொடக்குறிச்சி பாஜ வேட்பாளரான கிருத்திகாவின் நெருங்கிய உறவினரான, ஆனந்தம் பாளையத்தை சேர்ந்த கட்டுமான தொழில் செய்து வரும் அரவிந்தன் என்பதும், பைனான்சியிலிருந்து பணத்தை தொழிலுக்காக எடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார். வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.89 லட்சத்து 83 ஆயிரத்தை கைப்பற்றி அரவிந்தனிடம் விசாரணை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட சூளகிரி அடுத்த அட்டக்குறுக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் (65). அதிமுக பிரமுகரான இவரது வீட்டில், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக, வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் கீதாராணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் பசவராஜ் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில், கட்டுக்கட்டாக இருந்த ரூ.65 லட்சத்தை பறிமுதல் செய்தனர். நிலத்தை விற்ற பணம் என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார், பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அமமுக வேட்பாளராக அமைப்பு செயலாளர் சுந்தர்ராஜ் போட்டியிடுகிறார். இவர், முப்புலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பறக்கும் படை (எப்எஸ்டி) ஆறுமுகராஜ் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் முப்பிலிவெட்டியில் உள்ள வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டினருகே சென்ற போது வீடு அருகே கேட்பாரற்று கிடந்த சூட்கேசை கைப்பற்றினர். அதில் ரூ.14 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது.
தகவலறிந்து வருமான வரித்துறையினர் வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டிற்கு வந்து காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டின் அருகே கிடந்த சோல்டர் பேக்கில் இருந்த ரூ.6.38 லட்சத்தை பறிமுதல் செய்தனர். ஒரே காம்பவுண்டிற்குள் உள்ள அவரது மகன் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் அவர்கள் வீட்டின் பல்வேறு அறைகளில் இருந்து ரூ.27.65 லட்சம் சிக்கியது. சோதனையில் மொத்தம் ரூ.48 லட்சத்து 3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாசுதேவநல்லூர்: வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட நாரணபுரம் என்ற தேசியம்பட்டி அதிமுக நிர்வாகி முத்துராமலிங்கம் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பனையூர் பகுதியில் பைக்கில் வந்த பாஜ நிர்வாகி ராஜபாண்டியனிடம் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் தொகுதி பாஜ வேட்பாளர் கேஆர்எம். ராதாகிருஷ்ணன் உறவினரான ஆறுமுகநேரி பூவரசூரில் உள்ள வெங்கடேஷ் (40) வீட்டில் ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளம் ஒன்றிய அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு பொருளாளர் நாகராஜின் (36), பர்னிச்சர் கடைக்கு நேற்று பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பணம் வாங்கி வருவதை நோட்டமிட்ட சிலர் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த கடையில் அதிரடி ரெய்டு நடத்தி ரூ.17 லட்சத்து 71 ஆயிரத்து 300 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
தேனி: தேனி மாவட்டம், போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி நேற்று ஆதரவாளர்களுடன் போடியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, போடி சுப்புராஜ் நகரில் அதிமுகவினர் பலர் வீடுவீடாக பணம் பட்டுவாடா செய்துள்ளனர். தகவலறிந்த போடி தாசில்தார் சந்திரசேகரன் தலைமையிலான பறக்கும்படையினர் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ.15 லட்சத்தையும் கைப்பற்றினர்.
சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்டிநாயக்கன்பட்டி அதிமுக கிளை செயலாளர் ராசு வீட்டின் முன் பணம் பட்டுவாடா செய்தவர்கள் ரொக்க பணத்தை வீசிவிட்டு ஓட்டம் பிடித்தனர். அந்த பணத்தை அதிகாரிகள் சேகரித்தனர். இதில், ரூ.1.93 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, தேர்தல் நடத்தை விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு விவேகானந்தா நகர் பகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு பறக்கும் படை அதிகாரி அருண்குமார் தலைமையிலான குழுவினர், போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அருணாசலபுரத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் நாகராஜ் (46), வாக்காளர்களுக்கு அதிமுக தலைவர்கள் படங்களுடன் உள்ள தேர்தல் மாதிரி வாக்குச்சீட்டு மற்றும் பணம் கொடுத்து கொண்டிருந்தார். இதையடுத்து பறக்கும் படையினர் அவரிடமிருந்த ரூ.2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, இதுகுறித்து வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக நேற்றிரவு காரைக்குடி வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் சென்றபோது, வாக்காளர்களுக்கு காரில் வந்து பணம் கொடுத்து கொண்டிருந்த மணிகண்டன்(32), மாரிமுத்து(35), சாலமன் (35) ஆகிய 3 பேரும் போலீசரைப் பார்த்ததும் தப்பி ஓடினர். போலீசார் விரட்டி சென்று பிடித்து கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 85 ஆயிரம் பணம், சொகுசு கார் மற்றும் 2 டூவீலர்களை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவர்கள் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தெரிய வந்துள்ளது.
* வாக்காளர்களுக்கு தருவதற்கு ரூ.17 கோடி வந்துள்ளதாக வீடியோ: அதிமுக வேட்பாளர் உட்பட 53 பேர் மீது போலீசார் வழக்கு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளராக கேஆர்பி பிரபாகரன், அதிமுக நிர்வாகிகளிடம் தலைமையிடமிருந்து ரூ.17 கோடி பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வந்திருப்பதாக பேசும் வீடியோ வைரலானதையடுத்து, ஆலங்குளம் தேர்தல் நடத்தும் அலுவலர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் இந்த வீடியோ காட்சிகள் கடையம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் நிர்வாகிகள் மத்தியில் அதிமுக வேட்பாளர் கேஆர்பி பிரபாகரன் பேசியிருப்பது தெரியவந்தது. பறக்கும் படை அதிகாரி விமலா ராணி புகாரின்படி கடையம் போலீசார் வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரன், கடையம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அருவேல்ராஜ் உட்பட 53 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* பெரம்பலூரில் சிக்கிய ரூ.2.50 கோடி
பெரம்பலூர் தாலுகா செங்குணம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை அருகே நேற்றுமுன்தினம் நள்ளிரவு தாசில்தார் பழனிசெல்வம் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெரம்பலூரிலிருந்து வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி 5 அட்டை பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அட்டை பெட்டிகளில் இருந்த ரூ.2கோடியே 49லட்சத்து 95 ஆயிரம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்டிஓ அனிதாவிடம் நேற்று காலை ஒப்படைத்தனர். கார் டிரைவர் உள்பட 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
* கொட்டகைக்குள் வீசப்பட்ட பணம்
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒண்டிப்புதூர் சண்முகா லே-அவுட் பகுதியில் அதிமுக-வினர் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பணம் பட்டுவாடா செய்து கொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பறக்கும் படை அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது, ஜீப்பில் அதிகாரிகள் வருவதை கண்டதும், அதிமுகவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தான் கையில் வைத்திருந்த ஒரு நோட்டு புத்தகம் மற்றும் ரூ.48 ஆயிரத்தை அருகே இருந்த ஒரு கால்நடை கொட்டகைக்குள் வீசிவிட்டு அவருடன் வந்தவர்களும் தப்பி சென்றனர். இதனைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ.48 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் அதிமுகவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
