அமெரிக்க பேச்சுவார்த்தை குழு இன்று பாக். பயணம் ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் அழிக்கப்படும்: மீண்டும் பூச்சாண்டி காட்டும் அதிபர் டிரம்ப்; பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இல்லை

வாஷிங்டன்: அமெரிக்க பேச்சுவார்த்தை குழு இன்று பாகிஸ்தான் செல்வதாக அறிவித்த அதிபர் டிரம்ப், இதில் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் அழிக்கப்படும் என மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளார். ஈரான் துறைமுகங்களை முற்றுகையிடும் அமெரிக்க கடற்படையின் நடவடிக்கை தொடர்வதால், தங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை குழு அனுப்பப்படவில்லை என ஈரான் கூறியிருக்கிறது. அமெரிக்கா-ஈரான் இடையேயான 2 வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது.

இதற்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்ய பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். லெபனானில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே 10 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை வரவேற்று, ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஈரான் நேற்று முன்தினம் அறிவித்தது.

ஆனால், ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படும் வரையிலும், அந்நாட்டின் துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்களை தடுக்கக் கூடிய அமெரிக்க கடற்படையின் முற்றுகை முழு வீச்சில் நீடிக்கும் என டிரம்ப் கூறியது ஈரானை வெறுப்பேற்றியது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்ததோடு, அப்பகுதியை கடந்த இந்தியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை தாக்குதல் நடத்தியது.

பாரசீக வளைகுடா, ஓமன் கடலில் நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் நகர்ந்தாலோ, ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்றாலோ தாக்குதல் நடத்தப்படும் என புரட்சிகர காவல் படை அறிவித்தது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்பட்டு விட்டது. மேலும், இந்த விவகாரம் அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதிலும், அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதிலும் பெரும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தங்களின் பேச்சுவார்த்தை குழு இன்று பாகிஸ்தான் செல்வதாக அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

இதுதொடர்பான அவரது சமூக ஊடக பதிவில் கூறியிருப்பதாவது: ஹார்முஸ் ஜலசந்தியில் துப்பாக்கி சூடு நடத்த ஈரான் முடிவு செய்திருப்பது, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முழுமையான மீறல். ஏற்கனவே அவர்கள், ஒரு பிரான்ஸ் கப்பலையும், இங்கிலாந்து சரக்கு கப்பலையும் தாக்கி உள்ளன. (2 இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலை டிரம்ப் குறிப்பிடவில்லை). இது ஒன்றும் நல்ல செயல் அல்ல.

எனது பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு நாளை (இன்று) மாலை செல்வார்கள். செவ்வாய் கிழமை பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதால் ஈரானுக்கு ஒரு நாளுக்கு 50 கோடி டாலர் இழப்பு. எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. சொல்லப்போனால் ஈரானின் நடவடிக்கையில் இப்போது பல கப்பல்கள் எண்ணெய் வாங்க அமெரிக்காவுக்கு வருகின்றன. நாங்கள் மிகவும் நியாயமான, ஏற்புடைய ஒரு ஒப்பந்தத்தை முன்வைக்கிறோம்.

அவர்கள் அதை ஏற்காவிட்டால், ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் அமெரிக்கா தகர்த்துத் தள்ளும். இனி நல்லவர் வேஷம் ஏதும் கிடையாது. அவர்கள் மிக விரைவாகவும், எளிதாகவும் வீழ்ச்சியடைவார்கள். ஈரானின் கொலை இயந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இவ்வாறு வழக்கம் போல் டிரம்ப் பூச்சாண்டி காட்டி உள்ளார்.

அதே சமயம், அமெரிக்காவின் முற்றுகை தொடரும் வரை பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தை குழு அனுப்பும் எண்ணம் இல்லை என ஈரான் திட்டவட்டமாக கூறி உள்ளது. இதனால் இன்றைய பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி, மீண்டும் போர் மூளும் அபாயம் நிலவுகிறது.

* வான்ஸ் கிடையாதா?
தோல்வி அடைந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்க குழுவில் இடம் பெற்ற துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 2ம்கட்ட பேச்சுவார்த்தையில் இடம் பெற மாட்டார் என அதிபர் டிரம்ப் சூசகமாக கூறி உள்ளார். குஷ்னர், ஸ்டீவ் விட்காப் இருவரும் பாகிஸ்தான் செல்வதாக பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார். வான்ஸ் பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் வான்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தான் செல்வதாக வெள்ளைமாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* அமெரிக்காவிடம் யுரேனியத்தை தர முடியாது
‘அமெரிக்கா ஈரானுக்குள் சென்று பூமியில் புதைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட 440 கிலோ அணுத்துகள்களை எடுக்கும்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் கூறியிருந்தார். இது குறித்து துருக்கியில் நேற்று ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே அளித்த பேட்டியில், ‘‘செறிவூட்டப்பட்ட எந்த பொருளும் அமெரிக்காவிற்கு அனுப்பப்படாது.

இதுபோன்ற விஷயங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன். அமெரிக்கா இன்னும் தனது அதிகபட்ச நிலைப்பாட்டை கொண்ட விஷயங்களை கைவிட மறுப்பதால்தான் நேரடி பேச்சுவார்த்தைக்கான சூழல் ஏற்படாமல் இருக்கிறது’’ என்றார்.

Related Stories: