கொழும்பு: தமிழக மீனவர்கள் பிரச்னைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இலங்கை அதிபர் திசநாயகவுடன் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக நேற்று இலங்கைக்கு சென்றார். இந்திய துணை ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு அரசு முறை பயணமாக செல்வது இதுவே முதல் முறை. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவை துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மீனவர் பிரச்னைகளை மனிதாபிமான அடிப்படையில் கையாள்வது குறித்தும் இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர்.
மேலும், இந்திய வீட்டு வசதி திட்டம் மற்றும் இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் பின்னர், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் துணை ஜனாதிபதிக்கு மதிய விருந்து அளித்தார்.
இலங்கையின் முக்கிய தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் துணை ஜனாதிபதி சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தரவும், புயல் நிவாரணமும் வழங்கிய இந்திய அரசுக்கு தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.
பின்னர் மாலையில், கொழும்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் இந்திய புலம்பெயர் மக்களிடையே உரையாற்றினார். அதில், இந்திய வீட்டு வசதி திட்டத்தின் 3ம் கட்டத்தின் ஒருபகுதியாக, இந்தியாவின் நிதி உதவியுடன் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
