ஈரானிய கச்சா எண்ணெய் சரக்குகளுக்கான கட்டணங்களை சீன கரன்சி பயன்படுத்தி செலுத்திய இந்தியா.!!

டெல்லி: ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து முடங்கியதால் உலகின் பல நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து 1 மாதத்திற்கு கச்சா எண்ணெய் வாங்கி கொள்ளலாம் என்று அனுமதி அளித்தார்.

இதனை தொடர்ந்து இந்தியா மேற்கண்ட இரு நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. இதில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான சலுகை அனுமதி கடந்த 11-ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான சலுகை அனுமதி வரும் 19-ஆம் தேதியுடன் (நாளையுடனும்) முடிவடைகிறது. இந்த சிறப்பு அனுமதியை இதற்கு மேல் நீட்டிக்க முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இதனால் வளைகுடா நாடுகளிடமிருந்து அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய சூழலுக்கு இந்தியா தள்ளப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் டிரம்ப்பின் உத்தரவை மீறி ஈரான் நாட்டிடம் இருந்து 2 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த குறிப்பிட்ட பரிவர்த்தனையை, அமெரிக்க டாலரில் செலுத்தாமல் சீன நாட்டின் கரன்சியான யுவானை பயன்படுத்தி இந்தியா மேற்கொண்டு உள்ளதாம். பொதுவாக மேற்கத்திய நாடுகளால் தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து எண்ணெய் பெறப்படும் போது, இந்திய அரசுக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலைகள் அதற்கான தொகையை விநியோகம் செய்யும் போதோ அல்லது சரக்கை ஆர்டர் செய்யும் போதோ செலுத்தி விடுகின்றன. அந்த வகையில் ஈரானிடமிருந்து ஆர்டர் செய்த எண்ணெய்க்கு இந்தியா உடனடியாக பணம் செலுத்தி உள்ளது.

ஏற்கனவே ஹோர்மோஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களிடமிருந்து ஈரான் நாடானது, சீன யுவானில் கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த சூழலில் தற்போது இந்தியாவும், கச்சா எண்ணெய் வாங்க டாலருக்கு பதிலாக சீன கரன்சியை பயன்படுத்தி இருப்பது அமெரிக்காவிற்கு விழுந்த அடியாகவே பார்க்கப்படுகிறது. இதனால் டாலரின் மதிப்பு சரியாய் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: