உக்ரைனில் 6 அப்பாவிகள் சுட்டுக் கொலை: குற்றவாளியை சுட்டுக் கொன்ற போலீஸ்

கீவ்:உக்ரைன் நாட்டின் தலைநகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.ரஷ்யாவில் பிறந்து உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் வசித்து வந்த 58 வயது நபர், தான் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு முதலில் தீ வைத்துள்ளார்.

பின்னர் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கியுடன் தெருவில் இறங்கி பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அங்கிருந்து தப்பிய அவர் அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்து அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த உக்ரைன் அதிரடிப்படை போலீசார் சுமார் 40 நிமிடங்கள் அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் பணிய மறுத்து போலீசாரை நோக்கி சுடத் தொடங்கினார். இதனையடுத்து போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில் அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொடூர சம்பவத்தில், சூப்பர் மார்க்கெட்டிற்குள் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரும் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உக்ரைன் பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: