கடற்படை மீதான முற்றுகை நீக்கப்படாவிட்டால் வளைகுடா பிராந்தியத்தில் வர்த்தகம் சீர்குலைக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை

துபாய்: ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை நீக்காவிட்டால், வளைகுடா பிராந்தியத்தில் வர்த்தகத்தை நிறுத்திவிடுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் தொடங்கி 6 வாரங்கள் கடந்துவிட்டன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான சமீபத்தில் பாகிஸ்தான் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனினும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு அமெரிக்கா முறையாக ஒப்புக்கொள்ளவில்லை.

சமீபத்திய நடவடிக்கையாக பாகிஸ்தானின் தூதுக்குழு ஈரான் சென்றுள்ளது. இதனிடையே ஈரானின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் போக்குவரத்து நடக்கும் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் ஈரான் துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்கள் அந்த பகுதியில் நுழைய முடியாத சூழல் உருவாகி உள்ளது. ஈரானின் அனைத்து கப்பல்களும் தடுத்து நிறுத்தப்படும் என்று அமெரிக்க ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ஈரான் கடற்படைகள் மீதான முற்றுகையை நீக்காவிட்டால் வளைகுடா பிராந்தியத்தில் வர்த்தகத்தை நிறுத்திவிடுவோம் என்று ஈரானின் கூட்டு ராணுவ தலைமையின் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

* 2ம் சுற்று அமைதி பேச்சுவார்த்தைக்கான தேதி முடிவாகவில்லை: பாகிஸ்தான் அறிவிப்பு
இஸ்லாமாபாத்: “அமெரிக்கா – ஈரான் இடையே 2ம் சுற்று அமைதி பேச்சுவார்த்தைக்கான தேதி முடிவு செய்யப்படவில்லை” என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஈரான், அமெரிக்க இடையே 2 வார காலத்துக்கு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்தம் வரும் 22ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த சூழலில் 2ம் சுற்று அமைதி பேச்சுவார்த்தையை நடத்த அமெரிக்காவும், ஈரானும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்கா, ஈரான் இடையே 2ம் சுற்று பேச்சுவார்த்தைக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வௌியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் தாஹிர் ஆன்ட்ராபி வௌியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா, ஈரான் 2ம் சுற்று அமைதி பேச்சுவார்த்தைக்கான தேதியோ, இடமோ இன்னும் இறுதியாகவில்லை. இந்த பேச்சுவார்த்தையில் யார் பங்கேற்பார்கள் என்ற விவரங்களும் தற்போது இல்லை. அதனை அந்தந்த நாடுகள் முடிவு செய்ய வேண்டும். ஆனால், பேச்சுவார்த்தைக்கு முதலில் லெபனானில் அமைதி ஏற்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 6 வாரங்களுக்கு மட்டுமே எரிபொருள் ஐரோப்பாவில் விமானங்கள் ரத்து?
சர்வதேச எரிசக்தி முகமையின் நிர்வாக இயக்குநர் ஃபாத்திஹ் பிரோல் கூறுகையில், “தற்போதைய எரிசக்தி நெருக்கடி இதற்கு முன் சந்தித்திராத மிகப்பெரிய நெருக்கடி. ஹார்முஸ் நீரிணை உடனே திறக்கப்படா விட்டால் அது உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். மேலும், எரிவாயு விலை, மின்சார கட்டணம் உயரும். குறிப்பாக இந்த நெருக்கடியால் சில பகுதிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. ஜப்பான், கொரியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் பெருமளவில் மத்தியகிழக்கில் இருந்து எரிசக்தியை நம்பியிருக்கின்றன. ஐரோப்பாவை பொறுத்தவரை தற்போது 6 வாரங்களுக்கு விமான எரிபொருள் உள்ளது. தற்போதுள்ள நிலைமை நீடித்தால், வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் விநியோகம் குறைந்தால் சில விமானங்கள் ரத்து செய்யப்படும். கோடைகால விமான பயணங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது” என்றார்.

* கப்பல்கள் இயங்க அனுமதிக்க வேண்டும்
சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது வாங் யீ, ‘‘ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இயல்பான போக்குவரத்து மீண்டும் தொடங்குவதற்கு பணியாற்றுவது ஒரு சர்வதேச சமூகத்தின் ஒருமித்த கோரிக்கையாகும். ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார்.

* டீசல் ஏற்றுமதிக்கு ஆஸி. உத்தரவாதம்
ஈரான் போரினால் விலை உயர்ந்த நிலையில் இரண்டு டீசல் எரிபொருள் ஏற்றுமதிகளில் முதல் ஏற்றுமதிக்கு தனது அரசு உத்தரவாதம் அளித்தள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் நடந்த சந்திப்பின்போது, பேசிய அல்பானீஸ்,புரூனே மற்றும் தென்கொரியாவில் இருந்து 570000 பீப்பாய்களுக்கும் அதிகமான டீசலை விவா எனர்ஜி நிறுவனம் ஏற்றுமதி செய்யும் என்றார். இதனிடையே ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான விவா எனர்ஜி கீலாங் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் சந்தேகத்திற்கு உரிய சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: