லெபனான் -இஸ்ரேல் போர் நிறுத்தம் எதிரொலி ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறப்பு: அனைத்து வணிக கப்பல்களும் செல்லலாம், ஈரான் அரசு அறிவிப்பு

பெய்ரூட்: கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் தொடங்கியது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்கள் போக்குவரத்து தடைப்பட்டது. இந்நிலையில் ஈரான் , அமெரிக்கா இடையே இரண்டு வார காலத்துக்கு போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டது. கடந்த 7ம் தேதி முதல் இந்த போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால் இந்த போர் நிறுத்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி்யது.

இதன் காரணமாக லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. அமெரிக்காவின் மத்தியஸ்தம் காரணமாக இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் 10 நா்ள் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.  போர் நிறுத்தம் நீடிக்கும் வரை ஹார்முஸ் ஜலசந்தி அனைத்து வணிக கப்பல்களுக்காக முழுமையாக திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி எக்ஸ் தளத்தில், ‘‘இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம் நீடிக்கும் காலம் வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களும் செல்வதற்கான பாதை முழுமையாக திறக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* லெபனான் திரும்பும் மக்கள்
லெபனானில் நேற்று முதல் தற்காலிகமாக அமைதி நிலவி வருகின்றது. 10 நாள் போர் நிறுத்தம் என்றபோதிலும் சொந்த ஊர்களில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். நேற்று அதிகாலை தெற்குக் கடற்கரை நகரமான டயரை வடக்கு பகுதியுடன் இணைக்கும் முக்கிய பாலமான லிட்டானி ஆற்றின் மீதுள்ள காஸ்மீயே பாலத்தின் மீது ஏராளமான கார்கள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

ஒரு நாள் முன்னதாக நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்கு பின் அவசரமாக சரிசெய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட ஒற்றைச் சாலையின் வழியே மெத்தைகள், பயணப்பெட்டிகள் மற்றும் மீட்கப்பட்ட உடைமைகளால் நிரம்பிய வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. 10 நாட்கள் போர் நிறுத்தம் தான் என்பதால் உடனடியாக தங்களது வீடுகளுக்கு திரும்ப முயற்சிக்க வேண்டாம் என்று லெபனான் அதிகாரிகள் எச்சரித்தனர். எனினும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பலர் தெற்கு லெபனானை நோக்கி புறப்படத்தொடங்கினர்.

Related Stories: