ஈரான் உடனான மோதலில் வெற்றியை நோக்கி அமெரிக்கா செல்கிறது: அதிபர் டிரம்ப் பேட்டி

லாஸ் வேகாஸ்: ஈரான் உடனான மோதலில் அமெரிக்கா மிக விரைவில் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘கடந்த இரண்டு மாதங்களாக நாங்க அங்கு (வளைகுடா போர்) களத்தில் இருக்கிறோம். உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாங்கள் மிக விரைவில் வெற்றியைப் பெறப் போகிறோம்.

ஈரான் மிகவும் வலிமையான மற்றும் புத்திசாலித்தனமான நாடு. அந்த மக்கள் சிறந்த போராளிகள். ஆனால், தற்போது அவர்களின் ராணுவ திறன் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனை முன்கூட்டியே சொல்ல விரும்பவில்லை, இருந்தாலும் ஈரானிடம் தற்போது கடற்படையே இல்லை. அவர்களின் 158 கப்பல்கள் கடலின் அடியில் மூழ்கடிக்கப்பட்டு கிடக்கின்றன’ என்றார். தொடர்ந்து பேசிய டிரம்ப், கடந்த காலங்களில் ஈரான் கமாண்டர்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிட்டார். குறிப்பாக பாசிஜ் துணை ராணுவப் படையின் தலைவராக இருந்த சோலைமணியை ஒழித்தது பற்றி அவர் பேசுகையில், ‘சோலைமணி பற்றி உங்களுக்குத் தெரியும்தானே? அவரை நாங்கள் தீர்த்துக்கட்டினோம்.

இந்த உலக வரலாற்றிலேயே மிக மோசமான தீவிரவாதிகளில் ஒருவராக அவர் இருந்தார்’ என்றார். மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து டிரம்ப் கூறுகையில், ‘தற்போது ஈரான் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். விரைவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒருவேளை இந்த வார இறுதிக்குள் ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன். ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது. ஆனால் அவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதே எங்களது முக்கிய நோக்கம். ஒருவேளை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மீண்டும் போர் தொடங்கும்’ என்று அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

 

Related Stories: