நடிகர்கள் டயலாக்லாம் ஒருநாள் மட்டும்தான்: தலைவர்களை திரையில் தேட வேண்டாம் தரையில் தேடுங்கள்; கர்நாடக துணை முதல்வர் அட்வைஸ்; விஜய் எம்ஜிஆராக முடியாது என தாக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது சிவக்குமார் பேசுகையில், ‘‘இந்தியா’ கூட்டணி வலிமையாக உள்ளது. தென் இந்தியாவில் ஆதரவு இல்லாததால், பாஜ மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. நாட்டினுடைய கட்டமைப்பில் தமிழ்நாடும் கர்நாடகமும் முக்கிய பங்காற்றுகின்றன. 2வது முக்கிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஒரு நடிகர் தன்னை எம்ஜிஆருக்கு இணையாக கூறிக்கொள்கிறார்.

ஆனால், ஒரே ஒரு எம்ஜிஆர் மட்டுமே உண்டு, அவருடன் வேறு யாரையும் ஒப்பிட முடியாது. இளைஞர்கள் உணர்ச்சி மிகுதியில் திரையில் தலைவர்களை தேட வேண்டாம். நம்முடைய திராவிட மாடல் போல தலைவர்களை தரையில் தேடுங்கள். முன்னாள் முதல்வர் கலைஞர் தமிழகத்தில் அன்று அமைத்த திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவான அடித்தளத்தையும், ஆழமான ஆணி வேர்களையும் ஊன்றியுள்ளது. மு.க.ஸ்டாலின் நல்ல தலைவராக உள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதியும் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றார். இவ்வாறு சிவக்குமார் பேசினார்.

பின்னர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் பல தொகுதிகளுக்கு பயணம் செய்து வருகிறேன். மக்கள் திமுக கூட்டணியை ஆதரிக்கின்றனர். மீண்டும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும். முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு, காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரத்திற்கு தமிழ்நாடு வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் வலுவான திமுக-காங்கிரஸ் கூட்டணி பார்த்து எடப்பாடி பழனிசாமி பயத்தில் உள்ளார்.

இதனால் தான், நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள மேகதாது விவகாரத்தை அவர் தற்போது பேசி வருகிறார். இவ்விவகாரம் குறித்து நீதிமன்றமே இறுதி முடிவெடுக்கும். இளைஞர்கள் நடிகர்களுக்கு பின்னால் செல்ல வேண்டாம். ஏனெனில், நடிகர்களின் திரைப்பட வசனங்கள் ஒரு நாள் மட்டுமே நிலைத்திருக்கும். ஆனால், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருந்து மக்களுக்கு பயன் அளிக்கும். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

* திருச்சிக்கு நாளை மறுநாள் ராகுல் வருகை?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. திமுக, அதிமுக, பாஜ உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பிரசாரத்திற்காக தமிழ்நாடு நோக்கி படையெடுத்துள்ளனர். பாஜவை சேர்ந்த முக்கிய தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக திருச்சி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் லெனின் பிரசாத்தை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிகிறது. இதற்காக, நாளை மறுநாள் துறையூருக்கு ராகுல் காந்தி வர உள்ளதாக கூறப்படுகிறது. துறையூர் பஸ் ஸ்டாண்டு பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: