வரும் 21ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் – ராகுல் ஒரே மேடையில் பிரசாரம்: மல்லிகார்ஜூன கார்கே 20ல் குமரியில் பிரசாரம்

சென்னை: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 21ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்- ராகுல் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 20ல் கன்னியாகுமரியில் பிரசாரம் செய்ய உள்ளார். தேர்தல் பிரசாரம் வரும் 21ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும், தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் – ராகுல்காந்தி ஒரே மேடையில் தோன்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

ஆனால் ராகுல்காந்தியின் தமிழக வருகைக்கான தேதி இறுதி செய்யப்படாமல் இருந்தது. முதல்வரின் பிரச்சாரத்துக்கு ஏற்றவாறு தேதியை முடிவு செய்வதற்கான நடவடிக்கையில் காங்கிரஸ் தலைமை இறங்கியுள்ளது. இதற்கிடையே இன்று முதல் வரும் 18ம் தேதி வரை நாடாளுமன்றத்தில் பெண்களுக்கன 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வடிவு பற்றிய விவாதம் தொடங்குகிறது. இதனால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மேலிட தலைவர்களின் பிரசாரத்தை 20, 21ம் தேதிகளில நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அதை தொடர்ந்து, 21ம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் – ராகுல்காந்தி ஆகியோர் ஒரே மேடையில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர். ஆனால் எந்த இடம் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கூறினர்.

Related Stories: