எல்லாரையும் முதுகில் குத்தியவர்; ஜெ. போட்ட பிச்சையில் எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.50,000 கோடி சொத்து: செங்கோட்டையன் பகீர்

கோபி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் செங்கோட்டையன், நேற்று அளுக்குளி எம்.ஜி.ஆர்.நகரில் தேர்தல் பரப்புரையின் போது செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும், குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று எடப்பாடி கூறி வருகிறார். ஆனால் அவரது மருமகன், மைத்துனர், மகள், எடப்பாடி என எல்லாருமே தேர்தலில் போட்டியிடுகின்றனர். எடப்பாடிக்கு போடும் வாக்கு நோட்டாவிற்கு போடும் வாக்கை போன்று வீணாகிவிடும். 10 முறை தோற்ற பழனிச்சாமிக்கு வாக்களித்து என்ன செய்ய போகிறீர்கள்? என்னால் வளர்க்கப்பட்டவர் என் புறமுதுகில் குத்திவிட்டார்.

எனக்கு மட்டும் இல்லை, சசிகலா, தினகரன், ஓபிஎஸ், அண்ணாமலை, கடைசியாக பிரேமலதாவிற்கும் புறமுதுகில் குத்தி உள்ளார். ஒருத்தருக்கு கூட நன்றி இல்லாமல் தமிழ்நாட்டில் ஒருவர் இருக்கிறார் என்றால் எடப்பாடி பழனிசாமியே வேறு யாரும் இல்லை. உதயநிதி ஸ்டாலினை செத்துப்போ என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் என்றால் செத்தால் தான் லாபம் என சொல்லும் அளவிற்கு அவர் எவ்வளவு கொடூரமானவர் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அண்ணாமலையை பாஜ மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் தான் கூட்டணி என்று எடப்பாடி கூறினார்.

அந்த அளவுக்கு அண்ணாமலை என்ற பாவம் செய்தார். திரைப்படத்தில் நடிப்பவர்கள் ஆட்சிக்கு வரலாமா? என்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் திரைப்படத்தில் நடித்தனர். எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை அவர்தான் முதலமைச்சர். பின்னர் ஜெயலலிதாவும் திரைப்படத்திலிருந்து தான் வந்தார். ஜெயலலிதா போட்ட பிச்சையில் 50 ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டு, இன்று அவரது ஆட்டம் சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. கேட்டால் எனக்கு என்ன வசதியா இருக்கிறது? என்கிறார். ரூ.2,000 கோடிக்கு பேப்பர் மில், 3,000 கோடி ரூபாய்க்கு சேகோ மில். இது ஈரோடு மாவட்டத்தில் மட்டும் உள்ள கம்பெனிகள். தேர்தல் முடியட்டும், மற்ற இடங்களில் உள்ளவற்றை கண்டுபிடித்து விடலாம். அதிமுகவிற்கு சிமெண்ட் கலவை மட்டும் இல்லை, கான்கிரீட்டை பூசி விடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* தொகுதி மறுவரையறை செய்ய இவ்வளவு அவசரம் ஏன்? மதவாதத்தை மக்கள் மீது திணிக்க பாஜ முயற்சி; கொந்தளிக்கும் டி.ராஜா
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா வேலூரில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டை மதவெறி பாசிச சக்திகளின் பிடியில் விடக்கூடாது. தமிழ்நாட்டில் திமுகவின் நல்லாட்சி தொடர வேண்டும். மக்கள் ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இன்றைக்கு மோடி அரசு பெருமுதலாளிகளின் அரசாங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் நலனுக்கு எதிரான சட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இச்சூழலில்தான் தமிழ்நாட்டின் நிதி ஆதாரங்களை காப்பாற்றி, தமிழ்நாட்டை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக திமுக போராடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பல பிரச்னைகள் வருகின்றன. நாளை(இன்று) நாடாளுமன்றம் அவசரமாக கூடுகிறது.

பெண்களுக்கு இடஒதுக்கீட்டை கொடுப்பதாகவும், அதற்கான திட்டமிடல் தேவைப்படுகிறது என்பதற்காகவும் இக்கூட்டம் என்று சொல்லியிருக்கிறார்கள். பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் இதனை எப்படி செயல்படுத்துவது என்பதுதான் இன்றைக்கு கேள்வி. ஏற்கனவே பல முதலமைச்சர்கள் இந்த தொகுதி மறுவரையறை செயல்பட தொடங்கினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மிகுந்த எச்சரிக்கையோடு இப்பிரச்னையை சுட்டிக்காட்டியிருக்கிறார். தொகுதி மறுவரையறையை மக்கள் தொகை அடிப்படையில் செயல்படுத்தினால், தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் பாதிக்கப்படும்.

இந்த மாநிலங்களில் மக்கள் தொகை குறைவாக உள்ளது. இதனால் தமிழ்நாடு பாதிக்கப்படுவது சரியல்ல. நாளை(இன்று) நடக்கவுள்ள திமுக போராட்டத்தில் இந்திய கம்யூ., கட்சியும் கலந்து கொள்ளும். வட, தென்மாநிலங்களிடையே பரவலான சமநிலை வேண்டும். இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டும், ஒன்றிய அரசு. கூட்டாட்சி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அம்பேத்கர் அரசியல் சட்டத்தை உருவாக்கும் போதே குறிப்பிட்டிருக்கிறார். பாஜ இவற்றையெல்லாம் புறந்தள்ளி மதவாத நெறிகளை மக்கள் மீது திணிக்க முயற்சிக்கிறது. இதற்காகத்தான் இந்தியா கூட்டணி கட்சிகள் அரசியல் சாசனத்தை காக்க போராடி வருகின்றன. இப்பிரச்னைகளை அறியாமல் எடப்பாடி பாஜவுடன் சேர்ந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: