லேட்டாக வந்ததால் பிரசாரம் பாதியில் ரத்து சென்னையில் விஜய் ரோட் ஷோ-வில் தள்ளுமுள்ளு: கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

சென்னை: பிரசாரத்துக்கு தாமதமாக வந்த நடிகர் விஜய்யால் வழக்கம் போல் பிரசாரம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தினமும் விஜய் வாக்கு சேகரிப்பார். தினமும் அவரை பார்க்கலாம் என ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார். ஆனால் அதன்பிறகும் சரியாக விஜய்யால் பிரச்சாரத்தை திட்டமிட முடியவில்லை. ஒரு நாள் பிரசாரம் மறுநாள் ஓய்வு என ஒரு நாள் விட்டு விட்டு விஜய் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட தவெக வேட்பாளர்கள் போட்டியிடும் சென்னை தி.நகர், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு ஆகிய 3 பாயிண்ட்களில் ரோடு ஷோ நடத்த விஜய் அனுமதி பெற்றிருந்தார். முதல் இடமாக தி.நகர் (முத்துரங்கன் சாலை) 3 முதல் 4 மணி வரையும், 2வதாக ஆயிரம் விளக்கு (வள்ளுவர் கோட்டம்) 4 முதல் 5 மணி வரையும், 3வது இடமாக எழும்பூர் (ரித்தர்டன் சாலை) 5 முதல் 6 மணி வரையும் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது.

அதன் அடிப்படையில், 3 மணிக்கு வர வேண்டிய அவர் 4.15 மணிக்கு தி.நகர் வந்தடைந்தார். அவரது ரசிகர்கள் கூட்டத்தினால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தி.நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா சாலை, திநகர் உள்புற சாலைகள், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் இணைப்பு சாலைகள் போன்ற இடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் வாகனங்கள் நகர முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சிலர் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் சிக்கியிருந்ததாக தெரிவித்தனர்.

மேலும், விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து பலர் தங்களின் இருசக்கர வாகனங்களில் சென்றனர். இதனால் தி.நகர், ஆயிரம் விளக்கு பகுதிகளில் பொதுமக்கள் மட்டுமல்லாமல், அவசர சேவைகளும் பாதிக்கப்பட்டன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை நெரிசலை கடக்க முடியாமல் தவித்தன. இந்நிலையில், விஜய் பொதுமக்களைச் சந்தித்து உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அவர் எந்த இடத்திலும் உரையாற்றாமல் வாகனத்தில் நின்றபடி கையை அசைத்து மட்டுமே சென்றார். இதனால் பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தனர். சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.

அதே நேரத்தில், ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் சில இடங்களில் தள்ளுமுள்ளு நிலையும் ஏற்பட்டது. இதற்கிடையே, 3வது பாயிண்டுக்கு அனுமதி பெற்றிருந்த நிலையில் மணி 6ஐ கடந்ததால், எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட ரித்தர்ட்டன் சாலையில் விஜய் ரோடு ஷோ செல்ல இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டது. இதனால் தவெக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். விஜய்யின் ரோடு ஷோவை பார்க்க இருந்த மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தவெக வேண்டுகோள் விடுத்துள்ளது. திடீரென பிரசார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் நீண்ட நேரமாக காத்திருந்த தவெகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

* பெண் மயக்கம்
சென்னையில் விஜய் நடத்திய ரோடு ஷோவால் அவரது வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற ரசிகர்களால் பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பிரச்சாரத்தை காண வந்த பெண் ஒருவர் ரசிகர்களின் தள்ளுமுள்ளுவால் மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

* 6 மணிக்கு மேல வண்டி ஓடாது… திட்டி தீர்த்த ரசிகர்கள்
நடிகர் விஜய் தி.நகர், வள்ளுவர் கோட்டம் பகுதிகளில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு ஒதுக்கப்பட்ட 3 பாயிண்டுகளில் 2 இடங்களிலும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக கீழ்ப்பாக்கம் ரித்தர்டன் சாலையில் விஜய் பேசுவார் என சுமார் 3,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு நின்றனர். கூட்டம் நெருக்கடியில் இருந்து தப்பிக்கும் வகையில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை காத்திருந்தனர். ஆனால் 6 மணிக்கு மேல் வண்டி ஓடாது என்ற பாணியில் விஜய் இரண்டாவது இடமான வள்ளுவர் கோட்டத்தோடு பிரச்சாரத்தை முடித்து விட்டு நேராக காமராஜர் சாலை வழியாக பீச் வழியாக தனது வீட்டிற்கு பறந்தார். இதனால் ஏமாற்றத்துடன் அவரது ரசிகர்கள் கலைந்து சென்றனர். இவ்வளவு மணி நேரம் காத்திருந்த அவரது ரசிகர்கள் கடும் கோபமடைந்து விஜய்யை திட்டி தீர்த்தனர்.

* 6 சவரன், ரூ.65 ஆயிரம் ரொக்கம், 15 செல்போன்கள் அபேஸ்
தவெக தலைவர் நடிகர் விஜய் நேற்று தி.நகர் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்பொழுது, கோடம்பாக்கம் சக்தி நகரை சேர்ந்த திவ்யா என்பவர், அபிபுல்லா சாலையில் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து ஓடினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திவ்யா கழுத்தில் கிடந்த 6 சவரன் தாலி செயினை மர்ம நபர் பறித்துச் சென்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத திவ்யா சாலையில் அழுது புலம்பினார். இதுபோல், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ரூ.65 ஆயிரம் ரொக்கம், 15 பேரிடம் செல்போன்கள் திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். நடிகர் விஜய் திருப்பூர் பிரச்சாரத்தின் போது அவரை நேரில் பார்க்க வந்த பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Related Stories: