சொன்னாரு..! செஞ்சாரு..!! முதல்வர் மருந்தகம்

சொன்னாரு: 2024ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என அறிவித்தார்.

செஞ்சாரு: மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் “முதல்வர் மருந்தகம்” திட்டத்தை 2025ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம் / டி பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து 1000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொழில்முனைவோருக்கு தலா 3 லட்சம் ரூபாய் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் மானியமாக உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்பட்டது.

முதல்வர் மருந்தகத்திற்கு தேவைப்படும் மருந்துகளில் ஜெனிரிக் மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமும், பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகளை டாம்ப்கால் மற்றும் இம்காப்ஸ்-இடமிருந்து கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலமாகவும் வழங்க வழிவகை செய்யப்பட்டது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், கொள்முதல் செய்து வழங்கும் மருந்துகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்க ஏதுவாக 38 மாவட்டங்களில் மாவட்ட மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டது. முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக பணியாற்றும் வகையில் மருந்தாளுநர் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மருந்தக மென்பொருள் பயிற்சி, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் மருந்தகங்கள் பராமரித்தல் குறித்த பயிற்சி, மருந்து ஆய்வாளர்கள் மூலம் ஆவணங்கள் பராமரிப்பு பயிற்சி மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் மருந்தகங்களுக்கு நேரடியாக அழைத்து சென்று களப்பயிற்சி உட்பட மூன்று கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட்டது.

தொழில்முனைவோர் நடத்தும் அனைத்து முதல்வர் மருந்தகங்களுக்கும் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜெனிரிக் மருந்துகளை மானியமாகவும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகள் உட்பட இதர மருந்துகளையும் அளிக்கப்பட்டது. மாவட்ட மருந்து கிடங்கிலிருந்து ஜெனிரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகள் உள்ளிட்ட மருந்துகள் 1000 முதல்வர் மருந்தகங்களுக்கும் அனுப்பப்பட்டு பொது மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டது. மருந்தாளுநர் மற்றும் தொழில்முனைவோர் சிறப்பாக பணியாற்றிட அவர்களுக்கு தேவைப்படும் கடனுதவி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அளிக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: