வேலூரில் மா.கம்யூ., கட்சி மாநில செயலாளர் சண்முகம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சருடைய அந்த முன்மொழிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்று இருக்கிறேன். தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாப்பதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியாக, உறுதியாக நின்றிருக்கிறது. கடந்த காலத்திலும் ஒன்றிய பாஜ அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுத்தபோதும், உரிய திட்டங்களை மறுத்தபோதும் அல்லது நிதி ஒதுக்கீட்டிலே பாரபட்சமாக நடந்து கொண்டபோதும் வலுவான போராட்டத்தை நாங்கள் நடத்தியிருக்கிறோம்.
அதன் தொடர்ச்சிதான் இந்த தொகுதி மறுசீரமைப்பு. இதனால் தமிழ்நாட்டுக்கு உரிய தொகுதி எண்ணிக்கை கிடைக்காது என்பது அவர்கள் வெளியிட்டிருக்கக்கூடிய விவரங்களில் இருந்து தெரிய வருகிறது. ஆகவே இதர மாநிலங்களுக்கு உரிய சதவீதம் என்னவோ, அதே அடிப்படையில் தமிழ்நாட்டுக்கும் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். அதை குறைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்கிற முறையில்தான் முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அதை நாங்கள் வரவேற்கிறோம்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்வருக்கு ஆதரவாகதான் நாங்கள் இருப்போம். மொத்தம் 543 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதற்காக 816 ஆக மாற்றுகிறார்கள். அப்படியானால் அதே சதவீதத்திலேயே தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு தரணும். நேற்றைய தினம் வெளியான அறிவிப்பில் எந்தெந்த மாநிலத்துக்கு எவ்வளவு சீட் என்று வெளியிட்டிருக்காங்க. நமக்கு இப்ப 7.5 சதவீதமாக இருக்கு. ஆனால் இந்த அறிவிப்பின்படி 5.6 சதவீதம்தான் வருகிறது. 2 சதவீதம் குறையும் என்பதால்தான் எதிர்க்கிறோம்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் அவசர அவசரமாக இந்த நாடாளுமன்ற கூட்டத்தை பாஜ நடத்துகிறது. எல்லா கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க. பிரதான எதிர்கட்சி காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதிகமான எம்பிக்கள் வச்சிருக்கிற திமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் எல்லோருமே எதிர்க்கிறோம். முழுக்க முழுக்க இந்த சட்டப்பேரவை தேர்தலில் பெண்களுடைய வாக்குகளை பெறுவதற்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்கிற தந்திரத்தோடுதான் பாஜ அவசரமாக இந்த கூட்டத்தை நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
