தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு கடும் பாதிப்பு இன்று கருப்புக்கொடி போராட்டம்: மாநிலம் முழுவதும் நடைபெறும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஒன்றிய பாஜ அரசின் தொகுதி மறுவரையறை என்ற கருப்புச் சட்டத்துக்கு எதிராக, தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் இன்று கருப்பு கொடி ஏற்றுவோம், என்று தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு வழங்குவதற்கு 2023ல் ஒன்றிய அரசு சட்டம் இயற்றியது. இதையடுத்து வருகின்ற 2029ம் ஆண்டு நடைபெறும் மக்களவை பொதுத்தேர்தலில் அதை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு, மேற்கு வங்கம் சட்டப்பேரவை தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை ஒன்றிய அரசு அவசர அவசரமாக கூட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மேற்குவங்கத்தில் உள்ள 42 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் அவசரமாக நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. இது தேர்தல் பிரசாரத்தை முடக்கும் செயல் மட்டுமல்லாமல், அவசரகதியில் நாடாளுமன்ற தொகுதி வரையறை மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறையால் தமிழக எம்பிக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை வரையறுக்கப்படும் என்று ஒன்றிய அரசு கூறி வருகிறது. இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் உயரும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் தற்போது 80 எம்பிக்கள் உள்ளனர். இது 125ஆக உயர்த்தப்பட்டு பின்னர் 143 ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தை பொறுத்தவரை 40 தொகுதியில் இருந்து 73ஆக உயரும். ராஜஸ்தானில் 25ல் இருந்து 48ஆகவும், மகாராஷ்டிராவில் 48ல் இருந்து 79 ஆகவும், மத்தியபிரதேசத்தில் 29ல் இருந்து 50 ஆகவும் உயரும் என்று தெரியவந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் 39ல் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 51ஆக மட்டுமே உயரும் என்று தெரியவந்துள்ளது. எல்லா மாநிலங்களிலும் 2 மடங்கு மற்றும் அதற்கு மேல் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் நிலையில், தமிழகத்தில் வெறும் 12 சீட்டுகள் மட்டுமே உயரும் வாய்ப்புள்ளது.

விகித்தாச்சார அடிப்படையில் பாதிப்பு தமிழகத்திற்குத்தான் ஏற்படும். அதேநிலைதான் தென்மாநிலங்கள் அனைத்துக்கும் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தில் 20 தொகுதியில் இருந்து 23ஆகவும், ஆந்திராவில் 42ல் இருந்து 59ஆகவும், ஒடிசா 21ல் இருந்து 29ஆகவும், மேற்கு வங்கம் 42ல் இருந்து 64 ஆகவும் உயர்த்தப்படுகிறது. குறிப்பாக ஒன்றிய அரசை எதிர்க்கும் மாநிலங்களுக்கு இந்த தொகுதி மறுவரையறை பெரிய பாதிப்பை உருவாக்கியுள்ளது. இதனால் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் கட்சிகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை கூட்டினார். திமுக எம்பிக்களுடன் தர்மபுரியில் நேற்று காலை பிரசாரத்தை முடித்துவிட்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த பிரச்னை குறித்தும், இன்று கூடும் நாடாளுமன்ற கூட்டத்தில் திமுக எம்பிக்கள் செயல்பாடு குறித்தும் முதல்வர் விவாதித்தார். இதைத்தொடர்ந்து, திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொகுதி மறுவரையறை என்ற பெயரில், தனது லிமிட்டை தாண்டி, ஒன்றிய பாஜ அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது. இன்று நாடாளுமன்றத்தில் பாஜ அரசு கொண்டு வரப் போகும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பை காட்டும் வகையில், தமிழ்நாட்டில் அனைவரும் நம்முடைய வீட்டில் கருப்புக் கொடியை ஏற்றுவோம். கருப்புச் சட்டத்தை எதிர்த்து நம் எதிர்ப்பின் அடையாளமாக, கருப்புக் கொடியை ஏற்றுவோம்.

இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துக் கொண்டு போகும், எதேச்சதிகார ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றுவோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கிணங்க, அனைத்து திமுக மாவட்டங்களிலும் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை என பட்டித்தொட்டி கிராமம் முதல் மாநகரங்களில் உள்ள அனைத்து இல்லங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் இன்று (16ம்தேதி) கருப்பு கொடி ஏற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையறைக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துவிட்ட பேராபத்தை பற்றி நேற்று சொல்லி இருந்தேன். டெலிமிடேஷன் என்ற பெயரில், தனது லிமிட்டைத் தாண்டி, ஒன்றிய பாஜ அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது. வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குவது போன்றோ, தென் மாநிலங்கள் அரசியல் வலிமையை இழப்பது போன்றோ நடந்தால், “தமிழ்நாடு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது, ஒவ்வொரு குடும்பமும் தெருவுக்கு வந்து போராடும்” என்று சொல்லி இருந்தேன். யார் நல்லது சொன்னாலும் கேட்காத ஒன்றிய பாஜ அரசு, இதையும் கேட்கவில்லை.

சட்டத் திருத்தம் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்கப் பார்க்கிறார்கள். நாளைக்கு கொண்டு வரப் போகும் சட்டத் திருத்தத்தால், வட மாநிலங்களுக்கும் – தென் மாநிலங்களுக்குமான உறுப்பினர்கள் எண்ணிக்கை வேறுபடும். சும்மா, பெயரவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதியை அதிகரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு சாதகமான வட மாநிலங்களுக்கு, மிக மிக கூடுதலாக தொகுதிகளை அதிகரித்து, நம்முடைய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவமே தேவையில்லை என்ற நிலைமையை கொண்டு வரப் போகிறார்கள். இதைத்தான் எங்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என சொல்கிறோம்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களுக்கு தண்டனையா இது? தேச நலனுக்காக – தேச வளர்ச்சிக்காக நாங்கள் துணை நின்றால், எங்களின் அரசியல் உரிமையையே பறிப்பீர்களா? இதை விடக் கொடுமை என்ன இருக்க முடியும். பிரதமர் மோடி அவர்களே, தமிழர்களையும் – தென் மாநில மக்களையும் இரண்டாம் தர குடிமக்களாக்க பார்க்கிறீர்கள். டெல்லி பாஜவுக்கு தமிழர்கள் யார் என்று காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்நாட்டின் குரல் வளையை நெரிக்க நினைக்கும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நாளைக்கு (இன்று) நாடாளுமன்றத்தில் அவர்கள் கொண்டு வரப் போகும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பை காட்டும் வகையில், தமிழ்நாட்டில் அனைவரும் நம்முடைய வீட்டில் கருப்புக் கொடியை ஏற்றுவோம். கருப்புச் சட்டத்தை எதிர்த்து நம் எதிர்ப்பின் அடையாளமாக, கருப்புக் கொடியை ஏற்றுவோம். இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துக் கொண்டு போகும், எதேச்சாதிகார பாஜ அரசுக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றுவோம். இது தமிழ்நாட்டுக்கும் – டெல்லிக்குமான தேர்தல் என நான் சொன்னதை, பாஜ தொடர்ந்து நிரூபிக்கிறது. நான் சொன்னதன் உண்மையான அர்த்தத்தை பாஜவே உணர்த்திவிட்டது. அவர்களுக்கு தமிழ்நாடு முன்னேறிவிடக் கூடாது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் குரல்கூட நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது. அதற்கான சதித் திட்டத்தை சட்டமாகவே கொண்டு வருகிறார்கள். சதியை எப்படி சட்டமாக ஏற்க முடியும். கருப்புச் சட்டத்துக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றுவோம். ஒவ்வொரு வீட்டிலும், பொது இடங்களிலும் ஏற்றுவோம். மீண்டும் எச்சரிக்கை செய்கிறேன். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை முடிவு செய்யக் கூடாது. கருப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது. 8 கோடி தமிழர்களின் ஒற்றைக் கோரிக்கை இது. அரசியல் எல்லைகளை கடந்து, தமிழ்நாட்டின் உரிமையைக் காக்க தமிழ்நாடே ஓங்கி ஒலிக்கட்டும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! வெல்வோம் ஒன்றாக! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* உரிமைக்கான போராட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘தமிழ்நாட்டின் வீடுகளில், வீதிகளில், கடைகளில் கருப்புக் கொடி பறக்கட்டும்!. வாசல்களில் நம் எதிர்ப்புணர்வு கோலங்களாக பதியட்டும்!. இது தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்! தமிழர் உரிமைக்கான போராட்டம்!. எனவே கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் குரல் எழுப்புவோம்!. நாளை நாம் குரல் எழுப்ப மறுத்தால், நாடாளுமன்றத்தில் நமது குரல் மதிப்பற்று போய்விடும்!. இந்த போராட்டத்துக்கு தேவையான கருப்பு கொடிகள் உங்கள் வீடுதேடி வர மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: