தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூரில் பிரசாரத்தை முடித்துவிட்டு, தர்மபுரிக்கு சென்று அங்கு தங்கினார். நேற்று காலை 7 மணிக்கு தர்மபுரியில் இருந்து பாரதிபுரம் அரசு மருத்துவமனை, நான்கு ரோடு, தர்மபுரி உழவர் சந்தை, தர்மபுரி – பாலக்கோடு சாலை வழியாக சென்றபோது தர்மபுரி உழவர்சந்தை முன் பிரசார வாகனத்தை நிறுத்தினார். வேனில் இருந்தபடி அங்கிருந்த வியாபாரிகளை பார்த்து முதல்வர் கையசைத்தார். காலை 7.36 மணிக்கு பாலக்கோடு நகர பகுதிக்கு சென்றார். பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இறங்கி, அங்குள்ள சிறிய டீ கடையில் அமர்ந்து டீ குடித்தார்.
தொடர்ந்து, பாலக்கோட்டில் உள்ள மைதீன் நகர், கோட்டை தெரு, சைபீர் தெரு, சாந்தன் தெரு ஆகிய பகுதிகளில் நடந்து சென்று குழந்தைகளுக்கு கை கொடுத்தும், வாக்காளர்களுக்கு வணக்கம் தெரிவித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அங்கு வந்த ஒரு சிறுமி, ஆரவாரத்துடன் முதல்வரை பார்த்து, கடந்தாண்டு நான் உங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டேன். அதேபோல் இப்பொழுதும் நான் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆசையாக கேட்டுக்கொண்டார். பின்னர் பழைய செல்பி படத்தை செல்போனில் காண்பித்த சிறுமி, முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
பின்னர், கோட்டை பகுதியில் இருக்கும் உடன்ஷா என்ற மோதிக்கான் வீட்டிற்குள் சென்றார். மோதிக்கான் குடும்பத்தினர், முதல்வரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். “எங்களுக்கு 40 வருடமாக பட்டா இல்லாமல் இருந்தது. உங்கள் ஆட்சியில் பட்டா கொடுத்ததிற்கு ரொம்ப மகிழ்ச்சி. நன்றி சார். எங்க அம்மாவுக்கு மகளிர் உதவித்தொகை வருகிறது. எங்க அம்மா விடியல் பயணம் பஸ்சில் இலவசமாக செல்ல வசதியாக இருக்கிறது. ரொம்ப கோடான கோடி நன்றி சார்’’ என மோதிக்கான் தெரிவித்தார். தொடர்ந்து, முதல்வருக்கு குடிக்க அவர்கள் டீ கொடுத்தனர். அந்த டீயை வாங்கிக்கொண்ட முதல்வர், பசங்க நல்லா படிக்கிறார்களா என கேட்டார். அதற்கு அவர்கள் குழந்தைகள் நல்லா படிக்கின்றனர் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பின்னர் முதல்வருடன் மோதிக்கான் குடும்பத்தினர் செல்பி எடுத்துக்கொண்டனர்.
அதன் பிறகு வீதி, வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் உற்சாகத்தோடும், முக மலர்ச்சியோடும் வரவேற்றனர். அப்போது ஒருவர் பட்டா கொடுத்தது ரொம்ப நன்றி சார். இது கனவு சார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் 2 கி.மீ. தூரம் நடை பயணமாக முதல்வர் பிரசாரம் மேற்கொண்டார். பாலக்கோடு பேரூராட்சி 5வது வார்டில் கோட்டைபகுதியில் வசிக்கும் சுமார் 115க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 60 ஆண்டு காலமாக பட்டா கேட்டு மனுக்கள் கொடுத்து போராடி வந்தனர்.
கடந்த 2 ஆண்டிற்கு முன்பு தமிழக முதல்வர், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பாளையம்புதூர் அரசு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார். அப்போது தொப்பூர் டோல்கேட்டில் வைத்து நேரில் சந்தித்து 115 குடும்பத்திற்கு பட்டா வழங்கக்கோரி மனு கொடுத்தோம். அந்த மனுவை அப்போது இருந்த கலெக்டரிடம் வழங்கி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் கூறினார். அதன்படி கடந்த மாதம் தர்மபுரி வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் அனைவருக்கும் பட்டா வழங்கினார்.
60 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரசாரத்தின்போது, பாலக்கோடு பேரூராட்சி 15வது வார்டு தக்காளி மார்க்கெட் பின்புறம் வசிக்கும் பிரபாகரன்-இளந்தென்றல் தம்பதியின் மகனுக்கு திராவிடன் என்றும், அதேபகுதியை சேர்ந்த முத்தமிழ்வேலன்- அனுசுயா தம்பதியின் மகனுக்கு திராவிட வேந்தன் எனவும் பெயர் சூட்டினார். வழியில் மைதீன் நகர மக்கள் சிலர் பட்டா கேட்டு முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
* பஸ்சில் ஏறி வாக்கு கேட்ட முதல்வர்
பாலக்கோடு மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த டவுன் பஸ்சில் இருந்த பயணிகள், முதல்வர் ஸ்டாலினை பார்த்து உற்சாகமடைந்து கையசைத்தனர். பயணிகளுக்கு முதல்வர் கை கொடுத்தார். தொடர்ந்து அவ்வழியாக வந்த விடியல் பயணம் பஸ்சில் ஏறிய முதல்வர், பெண் பயணிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, விடியல் பஸ் பயணம் எப்படி உள்ளது? என கேட்டறிந்தார். அதற்கு அப்பெண்கள், நன்றாக உள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
