வாக்குச்சாவடிகளில் தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு அடிப்படை வசதிகளை பார்வையிட்டார் கண்ணமங்கலத்தில்

கண்ணமங்கலம், ஏப். 16: கண்ணமங்கலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை பார்வையிட்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கண்ணமங்கலம் அருகே உள்ள பல்வேறு கிராமப்புற வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்ற தேர்தல் மேற்பார்வையாளர் சத்தியேந்திர சிங், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சென்று வர ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சாய்தளப் பாதைகள், கோடை காலத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, கழிவறை மற்றும் நிழற்குடை வசதிகள் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்தும், தேர்தல் நாளன்று எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதையும், பறக்கும் படையினரின் சோதனைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது எஸ்ஐ ஆனந்தன், எஸ்எஸ்ஐ மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சாரதி, விஏஓ சரவணன், உதவியாளர்கள் ஏழுமலை, கஜேந்திரன், மற்றும் தேர்தல் பிரிவு பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: