விழுப்புரம், ஏப். 14: அதிமுக தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக நிர்வாகிகள் யாரும் கட்சி துண்டு போடாம, அதிமுகவின் கட்சி துண்டுகளை போட்டு செல்வதாகவும், தமிழ்நாட்டில் பாஜக டூபாக்கூர் கட்சியாகத்தான் உள்ளது. எல்லாமே பொய், பித்தலாட்டம்தான் என்று அக்கட்சி நிர்வாகி பேசும் ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகர பாஜ பொதுச்செயலாளர் பேசுவதாக கூறி வைரலாகும் அந்த ஆடியோவில் கூறியிருப்பதாவது, கட்சிக்காரன்னு (பாஜ) சொல்ரவங்க யாரும் கட்சி துண்டை தோளில் போடறீங்களா?. பாஜகவினர் எல்லாம் அதிமுக கட்சி துண்டை போட்டுக்கொண்டு தேர்தல் வேலையை பார்க்கிறார்கள். பாஜகவினர் திடீர்னு அதிமுக கட்சிக்காரங்களா மாறி விடுகிறார்கள். தேர்தலுக்காக எல்லாம் பொய், பித்தலாட்டம் செய்கிறார்கள். கோட்டக்குப்பத்தில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரையும் நான் பார்த்துவிட்டேன். தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் பாஜ கட்சி துண்டு போடுவதில்லை.
அதிமுக கூட்டத்துக்கு சென்றால் அவங்க கட்சி துண்டை தோளில் போட்டுக்கொள்கின்றனர். பணத்துக்காக கட்சி துண்டை மாற்றி போட்டுக்ெகாள்கிறார்களா என்று தெரியவில்லை. வானூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கூட்டத்துக்கு ெசன்ற பாஜகவினர் யாரும் கட்சி துண்டு போடவில்லை. தேர்தல், பணத்துக்காக நடிக்கிறார்கள். மோடி சொல்லி கட்சிக்கு எல்லா ேவலையும் செய்கிறோம். முதலில் கட்சிக்கு உண்மையா இருக்க வேண்டும். மாவட்ட தலைவர், முன்னாள் மாவட்ட தலைவர் முதல் அனைவரும் பணத்துக்காக பித்தலாட்டமாக நடந்து கொள்கின்றனர்.
தாழ்த்தப்பட்டவரை கேவலமாக நடத்துகிறார்கள். இப்படியாக போனால் திமுகக்காரன் தான் வெற்றி பெறுவான். போஸ்டர் ஒட்டுவதற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். என் பெயர் சரவணன், நான் கோட்டக்குப்பம் நகர பொதுச்செயலாளராக இருக்கிறேன். கட்சியில் 15 வருடமாக இருக்கிறேன். நானும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். எனக்கு இப்ப கட்சி பிடிக்கல. எலக்ஷன் நேரத்தில் வருகிறார்கள். கும்பிடு போட்டுவிட்டு செல்கிறார்கள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தமிழ்நாட்டில் டுபாக்கூர் கட்சியாகத்தான் பாஜ இருக்கிறது என்று நினைக்கிறேன். பாஜ என்பது டூபாக்கூர், பொய், பித்தலாட்டம்தான் நன்றி, வணக்கம். இவ்வாறு அவர் கூறியதாக ஆடியோவில் உள்ளது.
