பண்ருட்டி, ஏப். 2: பண்ருட்டி திருவதிகை பாலூர் ரோட்டில் வசித்து வருபவர் தண்டபாணி (40). இவர், பண்ருட்டியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணியில் இருந்து வந்தார். இவர் தற்போது பெங்களூருக்கு பணி மாறுதல் பெற்று சென்றார். இந்நிலையில் இவரது தந்தையும், இந்து சமய அறநிலையத்துறையின் ஓய்வுபெற்ற அலுவலருமான நாராயணசாமி மற்றும் தாய் ஆகிய 2 பேரும் பண்ருட்டி திருவதிகையில் இருந்து திருவாரூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தனர். நேற்று காலை அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த வைரம் மற்றும் தங்க நகை, பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நாராயணசாமி, பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
