கடலூர், ஏப். 12: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதை முன்னிட்டு கடந்த 15ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை நடைமுறைபடுத்திடவும், கண்காணித்திடவும் 87 பறக்கும் படைகளும், 87 நிலை கண்காணிப்புக்குழுவும், 9 வீடியோ கண்காணிப்பு குழுவும் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1,04,36,471 கைப்பற்றப்பட்டது. இதற்கான ஆவணங்களை வழங்கி உரிய தொகையை பெற்றுக்கொள்ளும் வகையில் குழு அமைக்கப்பட்டதன் அடிப்படையில் கடந்த 9ம் தேதி வரை ரூ.1,01,85,221 விடுவிக்கப்பட்டது. மேலும் 10ம் தேதி ரூ.1,34,860 விடுவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அலுவலர்கள் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் 1950, 04142-290119, சமூக வலைதள வாட்ஸ் அப் எண் 8248774852 மற்றும் இலவச இணைப்பு எண் 18004250037 போன்ற தொலைபேசி எண்ணுடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவிஜில் செயலி மூலம் விளம்பர பதாகைகள் அகற்றப்படாமல் இருத்தல், வாகனங்கள் அனுமதி இல்லாமல் இயக்குதல் தொடர்பாக 68 புகார்கள் பெறப்பட்டு 48 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. 20 புகார்கள் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இருந்தது. 1950 என்ற புகார் எண்ணின் மூலம் தேர்தல் வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி, வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம், இலவச பொருட்கள் விநியோகம் குறித்தும் 1273 புகார்கள் பெறப்பட்டது. அதில் 9 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பெறப்பட்ட 855 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் 348 அழைப்புகள் தவறான தகவல்களாகவும், பிற மாவட்டங்களை சார்ந்த 66 அழைப்புகளும், அன்பளிப்பு விநியோகம் தொடர்பாக 2 புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன, என மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
