உளுந்தூர்பேட்டை, ஏப். 13: உளுந்தூர்பேட்டையில் வசந்தவேலுவை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வசந்தவேலுவை ஆதரித்து தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியபோது, கடந்த 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் உங்கள் இல்லம் தேடி வந்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்வதை தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார். விலைவாசி உயர்ந்துவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். விலைவாசி ஏற்றத்திற்கு யார் காரணம். எடப்பாடி பழனிச்சாமியே காரணம். இப்போது நடக்கும் தேர்தல் டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்குமான தேர்தல். அதில் டெல்லி தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு வெல்ல வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வியில் முதல் மாநிலமாக இருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் டெல்லி தோற்கடிக்கப்பட வேண்டும். நம்முடைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கொரோனா காலத்தில் தமிழ்நாடு மக்கள் துன்பப்படுகின்றனர். ரூ.5000 வழங்குங்கள் எனக் கூறினார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி கஜானா காலி என கூறினார்.
ஆனால் அதன் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற நமது முதல்வர் ரூ.4000 வழங்க முதல் கையெழுத்து போட்டு வழங்கினார். உளுந்தூர்பேட்டை தொகுதியில் அரசு கல்லூரி, சிப்காட் தொழிற்பேட்டை உள்ளிட்ட எண்ணற்ற சாதனைகள் தொடர உளுந்தூர்பேட்டை திமுக வேட்பாளர் வசந்தவேலுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் என பேசினார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், ராஜவேல், முருகன், நகர செயலாளர் டேனியல்ராஜ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
