மீண்டும் வெற்றி பெற்றால் அனைத்து பணிகளையும் செய்து முடிப்பேன்

விருத்தாசலம், ஏப். 14: திட்டக்குடி தொகுதி பெண்ணாடம் அருகே உள்ள கிராமங்களில் நேற்று அமைச்சர் சி.வெ.கணேசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் 5ம் வகுப்பு வரை இருந்த காலை உணவு திட்டம் 8ம் வகுப்பு வரை உயர்த்தப்படும். தாய், தந்தை இல்லாத குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 கொடுக்க அரசாணை வெளியிட்டது, பொங்கலுக்கு ரூ.3000 வழங்கியது போன்றவை பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளதால் எல்லோரும் திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். பெண்களிடம், விவசாயிகளிடம், இளைஞர்களிடம், முதலமைச்சர் செய்திருக்கிற நல்ல திட்டங்களுக்கு நன்றி காட்டுவதற்கு நேரம் வந்திருக்கிறது. அதனால் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

36 ஆண்டு காலம் அரசியலில் பல்வேறு பதவிகளில் இருந்துள்ளேன். எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் சரி, ஆளுங்கட்சியாக இருக்கும் போதும் சரி, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது கூட என்னால் எவ்வளவு செய்ய முடியுமோ அதைத்தான் செய்ய முடிந்தது. நான் தற்போது அமைச்சரான பின்பு தான் முதலமைச்சரிடம் சொல்லி நூறாண்டு காலம் தீர்க்கப்படாத பிரச்னையாக இருந்த 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு வெலிங்டன் ஏரியை ரூ.130 கோடி நிதி ஒதுக்கி ஏரியின் கரையை பலப்படுத்தி பாசன வாய்க்கால்களை தூர்வாரி இந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம்.

விருத்தாசலத்தில் இருந்து தொழுதூர் வரை 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2 வழிச்சாலையை நான்கு வழி சாலையாக மாற்றி உள்ளோம். பெரம்பலூர் மாவட்டத்தையும் கடலூர் மாவட்டத்தையும் இணைக்கக்கூடிய கொரக்கவாடி, கீழக்கல்பூண்டி, பாளையம், ஆடுதுறை, அரங்கூர் ஆகிய பகுதிகளில் பாலங்கள் கட்டி கொடுத்துள்ளோம். பல ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாத நாவலூர், மங்களூர், தாழநல்லூர் பகுதியிலும் பாலம் கட்டி கொடுத்துள்ளோம். திட்டக்குடி தொகுதியில் 85 விதமான சாலைகள் அமைத்துள்ளோம். அங்கன்வாடி, நியாயவிலை கடைகள், சிமெண்ட் சாலைகள், உயர்மின் கோபுரங்கள் 90 சதவிகிதம் பணிகளை செய்து முடித்துள்ளேன். அமைச்சரானதால் தான் முதலமைச்சரிடம் கூறி இவ்வளவு வசதிகளையும் செய்ய முடிந்தது.

அதனால் மீண்டும் வெற்றி பெற்றால் அனைத்து பணிகளையும் செய்து முடிப்பேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் செய்துள்ள சாதனைகளை மக்களிடம் சொல்லி கொண்டு மக்களை சந்தித்து வருகிறேன். கஷ்டம், சந்தோஷம் எல்லாவற்றையும் எனது மக்களோடு நான் உரிமை கொண்டாடி பேசி வாக்கு சேகரித்து கொண்டிருக்கிறேன். 36 ஆண்டு காலம் எம்எல்ஏவாகவும் எம்பியாகவும் இருந்திருக்கிறேன். என்னுடைய தலைவர் மு.க ஸ்டாலினிடம் சொல்லி எல்லா திட்டத்தையும் நிறைவேற்றி உள்ளேன், என்றார்.

Related Stories: