கடலூர், ஏப். 5: தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக சார்பில் கடலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக ராஜ்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று காலை வேட்பாளர் ராஜ்குமார் தலைமையில் தவெகவினர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சீமாட்டி சிக்னலில் இருந்து பாரதி சாலை வழியாக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றனர். ஊர்வலமாக செல்லும்போது வெடி வெடித்தும், விசில் மற்றும் மேள தாளத்துடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக சென்றனர்.
இதையடுத்து கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகே 100 அடி இடைவெளியிட்டு பேரி கார்டு அமைக்கப்பட்டு, கடலூர் உட்கோட்ட டிஎஸ்பி தமிழ்இனியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஊர்வலமாக வந்த தவெகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டும் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் செல்லுமாறு கூறினர். இதை கேட்ட தவெகவினர் நாங்கள் எல்லோரும் உள்ளே செல்ல வேண்டும் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போலீசாருக்கும் தவெகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பெண் காவலர் ஒருவரை நெட்டி தள்ளியதில் கீழே விழுந்து அவரது கையில் காயம் ஏற்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலமாக வந்த தவெகவினரை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ராஜ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்த பின், தவெகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
