புதுச்சேரி, ஏப். 10: வாக்குப்பதிவை வீடியோ எடுத்து வெளியிட்ட தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வாக்குச்சாவடி மையத்துக்குள் மொபைல் போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மண்ணாடிப்பட்டு தொகுதியில் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தாமரை சின்னத்துக்கு வாக்களிப்பதையும், பின்னர் விவிபாட் இயந்திரத்தில் சின்னம் தெரிவதையும் வீடியோ எடுத்து வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் தவெகவினர் அனுமதி மீறி வாக்குச்சாவடி மையத்துக்குள் மொபைல் போனை எடுத்து சென்று, விசில் சின்னத்தில் வாக்களித்துவிட்டு அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தாங்கள் வாக்களிக்கும் காட்சிகளை இன்ஸ்ட்டா கிராம், எக்ஸ் வலைதள பக்கத்தில் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர். டிவிகே விர்ச்சுவல் வாரியர் என்ற குழுவில் பகிர்ந்துள்ளனர். இதனை பலர் புதுச்சேரியில் விசில் சத்தம் ஒலிக்க துவங்கியுள்ளதாக பதிவிட்டுள்ளனர்.புதுச்சேரி தேர்தல் துறையானது, மெய்ப்பொருள் என்ற கருத்தில், சமூக வலைதளத்தில் வரும் இது போன்ற பதிவுகளை சைபர் போலீஸ் உதவியுடன், ஸ்டெப் டவுன் நோட்டீஸ் கொடுத்து நீக்கி வருகின்றனர். அதன்படி இப்பதிவுகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்மந்தப்பட்ட நபர் குறித்து சைபர் உதவியுடன் விசாரித்து வருகிறோம், என்றார்.
