திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை பக்தர்களுக்கு 13 கோடியே 95 லட்சத்து 43 ஆயிரத்து 231 லட்டுகள் விற்பனையாகியுள்ளன. அதேநேரத்தில் 2024-2025ம் நிதியாண்டில் 12 கோடியே 18 லட்சத்து 53 ஆயிரத்து 535 லட்டுகள் விற்பனையாகியுள்ளன. அதன்படி முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், கூடுதலாக 1.76 கோடி லட்டுகள் விற்பனையாகியுள்ளன.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது ஒரு நாளைக்கு 4 லட்சம் லட்டுகள் தயாரித்து வருகிறது.
இதில் சுவாமி தரிசனம் செய்யும் அனைவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்குவதோடு, கூடுதலாக விரும்புவோருக்கு ஒரு லட்டுக்கு ரூ.50 வீதம் விற்பனை செய்கிறது. கடந்த நிதியாண்டில் லட்டு விற்பனை மூலம் ரூ.567 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, லட்டுகளின் தரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. நெய்யின் தரத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. லட்டுகளின் தரம் அதிகரித்து, பக்தர்களால் பாராட்டப்பட்டுள்ளது. இதற்கு சான்றாக, கடந்த ஆண்டு லட்டுகள் அதிகளவில் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
