தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்,”தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், நகை, கொலுசு, குடம், வெள்ளி குத்து விளக்கு, பிரிட்ஜ், வாஷிங்மிஷன் போன்றவற்றை லஞ்சமாக கொடுத்தும், இலவசங்களை அறிவித்தும் வாக்கு கேட்டு வருகின்றனர். இது அரசியல்சாசன விதிகளுக்கு மட்டுமில்லாமல், தேர்தல் நடத்தை விதிகளுக்கும் எதிரானதாகும். எனவே சட்டத்திற்கு புறம்பாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடவடிக்கைகள் அரங்கேறி வருகிறது. எனவே தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories: