கொல்கத்தா: வங்காளியில் பேசுவதால், நாங்கள் இந்தியர்கள் இல்லையா? குடியுரிமையை நிரூபிக்க வேண்டுமா? என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார். மேற்கு மெதினிப்பூர் மாவட்டம், கேஷியாரியில் நேற்று நடந்த திரிணாமுல் பேரணியில் முதல்வர் மம்தா பேசியதாவது: பாஜ , தேர்தல் ஆணையத்தின் உதவியுடன், என் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து பவானிபூர் தொகுதியில் எனது வேட்புமனுவை ரத்து செய்ய பாஜ முயன்றது. ஆனால் நாங்கள் அவர்களின் திட்டத்தை முறியடித்தோம். மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர மறு ஆய்வின் போது பாஜ கட்சி வாக்காளர் பட்டியல்களை திருத்தியது. சட்டமன்றத் தேர்தலில் பாஜ அடையும் படுதோல்வி மற்றும் அதைத் தொடர்ந்து டெல்லியில் அவர்கள் ஆட்சியை இழந்ததற்கு பிறகு தாமதமாக நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.
எஸ்ஐஆர் காரணமாக 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 90 லட்சம் வாக்காளர்களில் 60 லட்சம் பேர் இந்துக்கள். 60 லட்சம் பேர் முஸ்லிம்கள். தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் ஒரு பரந்த உத்தியின் ஒரு பகுதிதான் வாக்காளர் பெயர்களை நீக்குவது.எஸ்ஐஆர் மூலம் அவர்கள் வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறார்கள். மேலும், முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.நாங்கள் வங்காளியில் பேசுவதால், நாங்கள் இந்தியர்கள் இல்லையா? நாங்கள் தொடர்ந்து குடியுரிமையை நிரூபிக்க வேண்டுமா. இவ்வாறு அவர் பேசினார்.
