புதுடெல்லி: “மூலதனம், கொள்கை முடிவுகளால் மட்டும் இந்தியா 10 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய முடியாது” என தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார். இந்திய பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்திருந்த 10 டிரில்லியன் டாலருக்கு சட்ட சீர்திருத்த பாதை சட்ட விதி மாநாடு 2026 என்ற தலைப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் பேசினார். அப்போது, “இந்தியா 10 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நிச்சயம் எட்டும் என நான் நம்புகிறேன். ஆனால் வெறும் நிதி மூலதனம் மற்றும் கொள்கை முடிவுகளால் மட்டும் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா மாற முடியாது. அதற்கு வலுவான நீதித்துறை, சட்டத்தின் ஆட்சி மற்றும் சமூக நீதி ஆகியவை அதற்கு மிக முக்கியம். நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு வலுவான சட்ட கட்டமைப்புகள் மற்றும் நிர்வாகத்தில் வௌிப்படைத்தன்மையும் அவசியம். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது மற்றும் நீதித்துறையின் பங்கும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எனவே, 10 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைய, சட்ட செயல்பாடுகள் திறமையாக இருக்க வேண்டும். அது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்” என்றார்.
