திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆன்லைன் சர்வர் பழுதானதால், ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்பட்டன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஸ்ரீவாணி டிக்கெட் தினந்தோறும் காலை 9 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் விதமாக வெளியிடப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் அதே நாளில் மாலை 4 மணிக்கு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் ஆன்லைனில் நேற்று வெளியிடப்பட்டபோது தேவஸ்தானத்தின் சர்வரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஸ்ரீவாணி தரிசனத்திற்கான தினசரி ஆன்லைன் டிக்கெட்டுகளை வெளியிட முடியவில்லை.
இதன் காரணமாக, திருமலையில் உள்ள அன்னமய்யா பவனுக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் கவுண்டரில் நேற்று மதியம் 12.30 மணி முதல் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் மாலை 4 மணிக்கு வைகுண்டம் வரிசை வளாகம்-1 வழியாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று முதல் வாணி தரிசனத்திற்கான ஒதுக்கீடு வழக்கம்போல் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
