மும்பை: பெண்ணுரிமை என்ற பெயரில் குடும்ப அமைப்பை சிதைப்பதை ஏற்க முடியாது என்று நடிகை நோரா பதேகி காட்டமாக தெரிவித்தார். பிரபல நடிகையும் நடன கலைஞருமான நோரா பதேகி (34) அளித்த பேட்டியில், ‘சமூக வலைதளங்களில் எனது பேச்சை திரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெளியிட்டதால் தான் பெரிய பிரச்னைகள் ஏற்படுகிறது. எந்தவொரு தீவிரவாத கொள்கைக்கும் நான் எதிரானவள். பெண்கள் சுதந்திரமாகவும், சுயமாக சம்பாதிப்பவர்களாகவும், கனவுகளை நனவாக்குபவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அதே சமயம், ஒரு துணையுடன் இணைந்து பொறுப்புகளை பகிர்ந்து கொள்வதிலும், குடும்ப உறவுகளுக்கு மதிப்பு கொடுப்பதிலும் சமநிலை இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தனியாகப் போராடிய எனது தாயால் நான் வளர்க்கப்பட்டேன். அந்த அனுபவங்களின் அடிப்படையில் தான் குடும்பத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறேன். ஆண்கள் சமூகத்தில் அதிக பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
பெண்கள் பலமானவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் இருக்கும் அதே வேளையில், தங்களுக்கு ஒரு துணை தேவை என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை. பெண்ணுரிமை என்ற பெயரில் பாலினங்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்குவதையும், குடும்ப அமைப்பை சிதைப்பதையும் என்னால் ஏற்க முடியாது’ என்று நோரா பதேகி கூறியுள்ளார்.
