பிரபல நடிகையின் ‘எக்ஸ்’ பக்கம் முடக்கம்: மர்ம நபர்களின் செயலால் பரபரப்பு

 

மும்பை: திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரபல நடிகையின் சமூக வலைதள கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான சித்ராங்கதா சிங் (49), தற்போது ‘மாத்ருபூமி’ என்ற படத்தில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அபூர்வா லக்கியா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நடிகை சித்ராங்கதா சிங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதள பக்கம் மர்ம நபர்களால் நேற்று ஹேக் செய்யப்பட்டது.

தனது கணக்கு முடக்கப்பட்டதை அறிந்த அவர், ரசிகர்களை எச்சரிக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அனைவருக்கும் வணக்கம், எனது எக்்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதனை மீண்டும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எனவே அந்த கணக்கில் இருந்து வரும் பதிவுகள் அல்லது மெசேஜ்களை யாரும் கண்டு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். நடிகையின் எக்ஸ் பக்கத்தில் இருந்து மர்ம நபர்கள் அனுப்பும் லிங்குகளை ரசிகர்கள் கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது சித்ராங்கதா சிங்கின் டிஜிட்டல் பாதுகாப்பு குழுவினர் அந்த கணக்கை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2020ம் ஆண்டு நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் அவர் நடித்து வரும் நிலையில், இந்த ஹேக்கிங் சம்பவம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: