நாட்டின் பல வடமாநிலங்களில் சூழ்ச்சியையும், சூதையும் மட்டுமே கருவிகளாக கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவர்கள், அதே பாணியில் தமிழகத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணத்தோடு இந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி உள்ளதாக பாஜக மீது கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் திமுக எம்பி-யான திருச்சி சிவா.
செஞ்சி தொகுதியில் திமுக வேட்பாளர் மஸ்தானை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், தமிழ்நாடு திராவிட பேரியக்கத்தின் கோட்டை என்பதை வரும் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நாளன்று தமிழக் மக்கள் நிரூபிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். சூழ்ச்சியினால் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருப்பவர்களுக்கு நம் மக்கள் தழுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாஜக விமர்சிக்கும் அதே நேரம், ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாடில் உள்ள நிதிஆயோக் அமைப்பு மக்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழ்நாடு என சான்று அளித்துள்ளதாக திருச்சி சிவா குறிப்பிட்டு உள்ளார். வடக்கே இருந்து வந்தவர்கள் தமிழ்நாட்டை முற்றுகையிட நினைத்தால் அது அவர்களின் கனவாகவே இருக்கும், அவர்களின் இந்த எண்ணம் நிறைவேறாது. மக்களுக்கான நல திட்டங்களை வழங்குவதிலும், பாதுகாப்பாக மக்கள் வாழும் இடமாக தமிழ்நாடு இருப்பதாக டெல்லியில் இருக்கும் நிதி ஆயோக் அமைப்பு சான்றிதழ் தந்துள்ளது. வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர், அதையும் 40 சதவீதமாக உயர்த்தி தந்தவர்தான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பெண்களுக்கு இங்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவது உறுதி என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.
இதனிடையே போடி சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளர் ஓபிஎஸ்-ஐ ஆதரித்து பேசிய திருச்சி சிவா, மத்திய அரசுடன் இணைந்து இஸ்லாமியா்களுக்கு பாதகம் செய்தவா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி. மாநிலங்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவகாரத்தில், மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினா்கள் 13 போ் வாக்களித்தனா். இதன்மூலம் அதிமுக இஸ்லாமியா்களுக்கு பாதகம் செய்துவிட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும்போது இந்த பிரச்னை பெரிய ஆபத்தை ஏற்படுத்தும என்று சாடினார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை உயிரைக் கொடுத்து காப்போம் என்றும் கூறினார்.
