திருப்பத்தூர்: திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் அ.நல்லதம்பியை ஆதரித்து நேற்றிரவு நடந்த பிரசாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மூ.வீரபாண்டியன் பேசியதாவது: ஈரான் நமது நட்பு நாடு. நாட்டின் அதிபரை கொல்கிறார்கள். ஒரு கண்டனம் இல்லை. அமெரிக்கா உலகத்தையே போருக்கு தூண்டுகிறது, அநியாயத்தை கண்டிக்க முடியவில்லை. நாட்டின் பிரதமர், பார்வையாளர் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.
உலகத்தின் பெரிய நாட்டின் பிரதமர் கண்டித்தாரா? அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் ஆதரவாக பேசுகிறார். இந்தியாவின் பிரதமராக இருப்பதற்கு ஒரு நொடியும் நரேந்திர மோடிக்கு தகுதி இல்லை என்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தலைமை செயலாளர் மாற்றம் செய்யப்பட்டது பெரிய தவறு. எதிர் கட்சிகளிடம் கருத்தை கேட்க வேண்டும். வடக்கில் தொகுதிகளை அதிகப்படுத்தி தெற்கில் குறைக்கிறார்கள். தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது.
எங்களுக்கு ஓட்டு போட்டால் தான், மெட்ரோ திட்டத்தை கொண்டு வருவோம் என ஒன்றிய அமைச்சர் மிரட்டுகிறார். கும்பகோணத்தில் பல்கலை. மசோதாவை முடக்கி விட்டார்கள். புது, புது சட்டங்களை கொண்டு வந்து, சிறுபான்மை மக்களை நெருக்கடிக்கு ஆளாக்குகிறார்கள். பாஜகவையும், அதனுடன் கூட்டு சேர்ந்துள்ள அதிமுகவையும் தோற்கடித்து எங்கள் கூட்டணிக்கு பொதுமக்கள் மகத்தான வெற்றியை கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
