கேண்டிடேட்ஸ் செஸ் வைஷாலி நம்பர் 1: 10ம் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி

பாபோஸ்: கேண்டிடேட்ஸ் செஸ் ஓபன் பிரிவு, 10வது சுற்றுப் போட்டியில் நேற்று, தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஜவோகிர் சிண்டாரோவிடம் தோல்வியை தழுவினார். மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை வைஷாலி முதலிடம் பிடித்துள்ளார். சைப்ரஸ் நாட்டின் பாபோஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை நடப்பு உலக செஸ் சாம்பியன் உடன் மோதும் வாய்ப்பு பெறுவர்.

நேற்று நடந்த 10வது சுற்றுப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஜவோகிர் சிண்டாரோ உடன் மோதினார். துவக்கம் முதல் தடுமாற்றத்துடன் ஆடி வரும் பிரக்ஞானந்தா இப்போட்டியிலும் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே, சிண்டாரோ எளிதில் வெற்றி வாகை சூடினார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுரா, நெதர்லாந்து கிராண்ட் மாஸ்டர் அனிஷ் கிரியுடன் மோதி டிரா செய்தார்.

சீன வீரர் வெ யி, அமெரிக்காவின் பேபியானோ கரவுனா இடையிலான போட்டியும் டிராவில் முடிந்தது. ரஷ்ய வீரர் ஆந்த்ரே எஸிபெங்கோ, ஜெர்மனியின் மாத்தியாஸ் புளுபாம் இடையிலான மற்றொரு போட்டி டிரா ஆனது. ஓபன் பிரிவில் 10 சுற்றுகள் முடிவில் ஜவோகிர் சிண்டாரோ 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அனிஷ் கிரி 6, கரவுனா 5, ஹிகாரு நகமுரா, வெ யி, மாத்தியாஸ் 4.5 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பிரக்ஞானந்தா 4 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளார்.

மகளிர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, உக்ரைன் வீராங்கனை அன்னா முஸிசுக் இடையில் நேற்று நடந்த 10வது சுற்று போட்டி டிராவில் முடிந்தது. மற்றொரு இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், கஜகஸ்தான் கிராண்ட் மாஸ்டர் பிபிசாரா அஸாபயேவா உடன் மோதி தோல்வியை தழுவினார்.

10 சுற்றுகள் முடிவில் வைஷாலி 6 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அன்னா முஸிசுக், ஜு ஜினெர் 5.5 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், கேதரீனா லாக்னோ, பிபிசாரா அசாபயேவா, அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா தலா 5 புள்ளிகளுடன் அடுத்த இடத்திலும் உள்ளனர். திவ்யா தேஷ்முக் 4.5 புள்ளிகள் பெற்றுள்ளார்.

Related Stories: