டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் திரில் வெற்றி

புதுடெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் நேற்று, குஜராத் டைடன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 19வது தொடரின் 14வது போட்டி, டெல்லியில் நேற்று நடந்தது. அதில் டெல்லி கேபிடல்ஸ் – குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்து வீசியது. அதையடுத்து குஜராத் அணியின் துவக்க வீரர்களாக சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர்.

முகேஷ் குமார் வீசிய 3வது ஓவரில் சாய் சுதர்சன் (12 ரன்) கிளீன் போல்டாகி வெளியேறினார். அதையடுத்து, ஜாஸ் பட்லர் களமிறங்கினார். கில்லும், பட்லரும் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். பட்லர், 27 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசியிருந்தபோது, குல்தீப் யாதவ் பந்தில் கிளீன் போல்டானார்.

பின்னர், கில்லுடன், வாஷிங்டன் சுந்தர் இணை சேர்ந்து பொறுப்பாகவும் நேர்த்தியாகவும் ஆடி ரன்களை சேர்த்தனர். கில், 33 பந்துகளில் 6 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் தொட்டார். 18வது ஓவரில் கில் (45 பந்து, 5 சிக்சர், 4 பவுண்டரி, 70 ரன்) ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் வாஷிங்டன் சுந்தர் (32 பந்து, 55 ரன்) அவுட்டானார்.

20 ஓவர் முடிவில் குஜராத் டைடன்ஸ், 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் விளாசியது. அந்த அணியின், கிளென் பிலிப்ஸ் 14 ரன்னுடனும், ராகுல் தெவாட்டியா 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை எடுத்தது. இதையடுத்து குஜராத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories: