* சலிமா தலைமையில் இந்திய ஹாக்கி அணி
புதுடெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணி, இம்மாத கடைசியில் அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகளில் ஆடவுள்ளது. இதற்கான இந்திய அணி, சலிமா டெடெ தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் அணியின் கோல் கீப்பராக சவீதா சேர்க்கப்பட்டுள்ளார். தவிர, டிராக் ஃபிளிக் முறையில் மின்னல் வேகத்தில் கோல் போடுவதில் வல்லவரான தீபிகாவும் இந்திய அணியில் இணைந்துள்ளார். தடுப்பாட்ட வீராங்கனை ஜோதி, முன்கள வீராங்கனை மும்தாஜ் கான் ஆகியோரும் இந்திய அணியில் இணைந்துள்ளதால், வலுவாய்ந்த அணியாக காணப்படுகிறது.
* துப்பாக்கி சுடுதல் முகேஷ் ஏமாற்றம்
கிரேனடா: ஸ்பெயின் நாட்டின் கிரேனடா நாட்டில் ஐஎஸ்எஸ்எப் பிஸ்டல்/ரைபிள் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிச்சுற்றுக்கான தகுதி போட்டியில் இந்திய வீரர் முகேஷ் நெலவல்லி, 579 புள்ளிகள் பெற்று 14ம் இடத்தை பிடித்தார். துப்பாக்கி சுடுதலில் உலகின் நம்பர் 1 வீரராக திகழும் சீனாவின் ஹு கய், நேற்றைய தகுதி போட்டியில் 578 புள்ளிகள் பெற்று 15ம் இடத்தை பிடித்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, சீன வீரர் யு ஸி, இப்போட்டியில் 588 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
* ஆடவர் பிரிவில் ஆயுஷ் ஆதிக்கம்
ஆடவர் ஒற்றையர் பேட்மின்டனில், இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, 21-13, 21-16 என்ற நேர் செட்களில் சீன வீர் லீ ஷிபெங்கை அபாரமாக வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்திய முன்னணி வீரர் லக்சயா சென்னை, ஹாங்காங் வீரர் லீ சூக் யியு, 21-12, 21-19 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
* சாம்பியன்ஸ் கால்பந்து பேயர்ன் அபாரம்
மாட்ரிட்: யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் – பேயர்ன் அணிகள் மோதின. இப்போட்டியில் பேயர்ன் அணியின் லூயிஸ் டியாஸ் போட்டியின் 41வது நிமிடத்தில் முதல் கோல் போட்டு அசத்தினார். அடுத்த 5வது நிமிடத்தில் அந்த அணியின் ஹாரி கேன் மேலும் ஒரு கோல் போட்டார். மாறாக, ரியல் மாட்ரிட் அணி சார்பாக, கைலியன் எம்பாபே, 74வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே போட்டார். அதனால், 2-1 என்ற கோல் கணக்கில் பேயர்ன் அபார வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ஆர்சனல் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்டிங் அணியை வீழ்த்தியது.
