சென்னை: ராயபுரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டி.ஜெயக்குமார் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு வாக்காளர்கள் வழிநெடுகிலும் திரளாக நின்று இந்த தேர்தலில் உங்களை மிஸ் பண்ணமாட்டோம். கண்டிப்பாக இரட்டை இலைக்கு வாக்களிப்போம் என்று குரல் எழுப்பி வரவேற்பு அளிக்கிறார்கள். வாக்காளர்கள் மத்தியில் டி.ஜெயக்குமார் பேசும்போது, ‘’நான் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த காலத்தில் ராயபுரம் தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன்.
பராமரிப்பு இல்லாமல் இருந்த ராயபுரம் தொகுதியில் பாலங்கள். வீடுகள், கழிவுநீர் குழாய்கள் என்று எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தினேன். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த ராயபுரம் சுற்று வட்ட மேம்பாலத்தை கட்டிக் கொடுத்தேன். இடிந்து விழும் நிலையில் இருந்த பழைய பாலத்தை புதுப்பித்தேன். போக்கு வரத்து நெரிசலால் இன்னொரு நீண்டநாள் கோரிக்கையாக இருந்த ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு செல்லும் சுரங்கப்பாதை அமைத்து கொடுத்தேன். இதனால் மருத்துவமனைக்கு மக்கள் எளிதாக சென்று வர முடிந்தது. போஜராஜநகர் சுரங்கப்பாதை அமைத்து கொடுத்தது மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது. இப்படி நிறைய திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன்.
சிறுபான்மையோ பெரும்பான்மையோ அவர்களின் கஷ்ட நஷ்டங்களில் யார் இருக்கிறார் என்பதை சீர் தூக்கிபார்த்துத்தான் மக்கள் ஓட்டு போடுவார்கள். மதத்தை யாரும் பார்க்க மாட்டார்கள். மனித நேயத்தைத்தான் பார்ப்பார்கள். அந்த மனிதநேயம் கொண்டவர் டி.ஜெயக்குமார் என்பது ராயபுரம் தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். நமது கஷ்டங்களை தீர்க்க கூடியவர். மதத்தை தாண்டி ஒரு பண்பான, அன்பான, மனித நேயம் உள்ள அனைவரையும் நேசிக்க கூடிய வேட்பாளர் தங்களுக்கு தேவை அந்த வேட்பாளர் ஜெயக்குமார் என்று மக்கள் உணர்ந்துள்ளனர், அதனால் கண்டிப்பாக ஒரு மகத்தான வெற்றியை நான் பெறுவேன். ராயபுரம் தொகுதி மக்கள் எனக்கு வாக்களித்து ராயபுரத்தை ஒரு ஸ்டார் தொகுதி ஆக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’’என்றார்.
