திருவெறும்பூர்: தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 ெதாகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் கடந்த 30ம் தேதியும், திருச்சி கிழக்கில் கடந்த 2ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்தபின் 2 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார். மற்ற ெதாகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. பிரசாரத்துக்கு செல்வாரா என்பதே சந்தேகமாக உள்ளது. இதனால் தவெக வேட்பாளர்கள் சோர்வடைந்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் நவல்பட்டு விஜி, விஜய்யின் ஐந்தரை அடி உயர பீங்கான் சிலையை வைத்து வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று வேட்புமனு தாக்கலுக்கும் விஜய் சிலையுடன் ஊர்வலமாக வந்தார். துவாக்குடி பெல் பயிற்சி மையத்தில் இருந்து துவங்கிய ஊர்வலம் திருவெறும்பூர் ஐடிஐ முன்பு முடிந்தது. வாகனத்தில் விஜய் சிலைக்கு அருகில் நின்றபடி வேட்பாளர் நவல்பட்டு விஜியும் நின்றபடி வந்தார். பின்னர் விஜி மட்டும் வாகனத்தில் இருந்து இறங்கி சென்று தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இன்று திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது விஜய்யின் சிலையை வாகனத்தில் எடுத்து சென்று ஆதரவு திரட்டினார்.விஜய் எப்படியும் பிரசாரத்துக்கு வரப்போவதில்லை. எனவே விஜய்க்கு பதிலாக அவரது சிலையை வைத்து வேட்பாளர் விஜி வாக்கு சேகரிப்பதாக திருவெறும்பூர் தொகுதி தவெகவினர் கூறுகின்றனர்.
